இலங்கையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமுல்படுத்த ஐ.நா.வின் பங்கேற்பு அவசியம்

0
554

உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான சிறப்பு அறிக்கையாளர் திரு. பாப்லோ டி கிறிவ் அவர்களின் கவனத்திற்கு !

இலங்கையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை அமுல்படுத்த
ஐ.நா.வின் பங்கேற்பு அவசியம்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினராகிய நாம ; இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புக்களின் தற்போதைய நிலவரம் குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறறோம்.
01 ஒக்டோபர் 2015 அன்று இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30ஃ1  இல் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் குறித்து அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் தேசிய கலந்தாலோசனை மாத்திரமே நடாத்தப்பட்டு அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்மானம் 30ஃ1  மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்ட போதும், மார்ச் 2017இல் மீளவும் தீர்மானம் 34ஃ1  ஏற்கப்பட்ட பின்னரும், காணாமற்போனோர் அலுவலகம், நீதிப்பொறிமுறை, இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறைகள் எதுவுமே இதுவரையில் அமுலுக்கு வரவில்லை என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். அடிப்படையில் இவற்றை ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்துவதற்கான கொள்கைத்திட்டங்கள் அரசிடம் இருப்பதற்கான சான்றாதாரங்களும் கிடையாது. தான்தோன்றித்தனமான முறையில் தனக்கு விரும்பியபோது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக சிலவிடயங்களை மேற்கொண்டுவருவதாகவே காண்கிறோம்.
நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் ஒருங்கிணைந்த முறையிலும் ஒன்றை ஒன்று பலப்படுத்தும் வகையிலும் அமுல்படுத்தப்படும் போதே அவை நீண்டகாலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதுடன் நிலையான நல்லிணக்கத்துக்கும் இட்டுச்செல்லும். எனவே, இது சார்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த எமது கொள்கை நிலைப்பாட்டை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்:

1.    நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு நிலைமாறுகால நீதி அமைச்சகத்தை ஸ்தாபித்தல் வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், நீதிப்பொறிமுறை, உண்மையைக் கண்டறிவதற்கான ஆணையகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் பொறிமுறைகள் ஆகிய கட்டமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் சுயாதீனமாக இயங்குவதற்கும், அவற்றின் நிதி மற்றும் நிர்வாக விடயங்களை அமுல்படுத்துவதற்கும், ஏனைய அரச மற்றும் நிர்வாக அங்கங்களுடன் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் தொடர்புபட்டு இயங்கவும், சர்வதேச ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளவும் இத்தகையதொரு அமைச்சகம் அவசியமானதாகும். எனவே இந்த அமைச்சகத்தை ஏற்படுத்தி அமுல்படுத்துவதற்கு நிலைமாறுகால நீதி சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்.   இதன் மூலம் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை முன்னெடுப்பதற்கு சட்ட அடித்தளம் இடுவதுடன் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரக்கூடிய எந்த ஒரு அரசாங்கமும் தொடர்ச்சியாக இதை கொண்டு நடாத்துவதற்கும் அடித்தளம் இடும். இந்த சட்டத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் உரிய சிறப்பு நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

2.    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் குடும்பங்களுக்கான நீதி:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறவுகள் தமது காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களின் உண்மை நிலையைக் கண்டறிய தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வயோதிபத்தாய்மார்கள் ஏழு மாதங்களுக்கும் மேலாக தமது உடல்நிலையையும் கருத்திற்கொள்ளாது வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி இரவு பகலாக அரசிடம் தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு கோரி நிற்கின்றனர். ஆனால் அரசு மௌனமாக உள்ளது. இதில் அரசுக்கு வெளிப்படையாக காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைகுறித்த உண்மையைக் கண்டறிவதில் தானும் பங்குதாரராகும் கடப்பாடு உள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும். பலவந்தமாக காணமாலாக்கப்படுதலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தைப் பற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானிப்புகளில்  கூறியிருப்பவற்றை உள்ளடக்கி இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளுடன் இணைந்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30 ஆகஸ்ட் 2017 அன்று ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு முன்வைக்பட்ட பகிரங்க மடலில் உள்ளடக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும் .

3.    மீள நிகழாமையை உறுதிப்படுத்தல்:

இலங்கையின் அரசியல் பிரச்சினை என்பது சிறுபான்மை சமூகங்களான வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் சிங்கள பௌத்த இன மேலாதிக்கத்தினால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிப்படையாக அரசியல், சமூக, கலாச்சார ரீதியாகவும், அரச சட்டங்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்புகளாலும் அடக்கப்படுவது மற்றும் வன்முறைக்கு உள்ளாவதாகும். இவற்றின் நீட்சியாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை நிராகரித்து அவர்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தமும் உரிமை மீறல்களும் அமைந்தன. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்த பின்னரும் சிறுபான்மையினர் மீதான இனவாத பாரபட்சங்கள், அடக்குமுறைகள், வன்முறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இலங்கைச் சூழலில் இனவாதத்தை ஒழிப்பது, மொழியுரிமையை உறுதிப்படுத்துவது மற்றும் அரசியல் தீர்வு என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதில் பிரதான அங்கங்களாகும். அத்துடன் அரச நிர்வாக கட்டமைப்பிலும், பொலிஸ் மற்றும் இராணுவத்திலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீக்குதல், தண்டித்தல் ஆகியனவும் அவசியமாகும். எனினும் அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது மீறல்கள் தொடர்வதற்கு அடிப்படையாயுள்ளது:

•    அரசியல் மற்றும் சமூக தளத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் நடவடிக்கைகள்  தீவிரமடைந்து வருகின்றன. இது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தையும்  அரசின் நல்லாட்சியில் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே. இந்த சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் நடவடிக்கைகளை உடனடியாக முடக்கி நாட்டில் சிறுபான்மையினரும் கௌரவமாகவும் சமஅந்தஸ்துடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும்

•    வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி அமையும் என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருப்பினும், தமிழ் மொழி முழுமையாக நிர்வாக மொழியாக நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அரச நிர்வாக அங்கங்கள் சிங்கள மொழி மூலம்  தமிழ் பேசும் மக்களுடன் தொடர்புகொள்கின்றனர். மலையக தமிழ் மக்கள் செறிந்து வாழும் மத்திய பிரதேசங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது. எனவே, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் தமிழ் மொழிப் பரிகரணத்தை அரச நிர்வாகத்தில் உறுதிப்படுத்துவது அவசியம். எனவே தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் தமிழ் பேசும் அரச ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

•    வடக்கு கிழக்கில் நிலவும் இராணுவ மயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவருதல்:

வடக்கு கிழக்கில் நிலவும் இராணுவ மயமாக்கலானது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை சிறுபான்மையினர் மீது தொடர்ந்தும் நிலை நிறுத்துவதாயுள்ளது. இந்த பிரதேசங்களில் இராணுவத்தின்  இருத்தலானது தனிநபர் வாழ்விலும் சமூகவாழ்விலும் எப்பொழுதும் அச்ச உணர்வையும் நிம்மதியற்றத் தன்மையையம்  ஏற்படுத்தியுள்ளது. மக்களின் சுயாதீனமான சுதந்திரமான நாளாந்த வாழ்வு என்பதை இல்லாது செய்துள்ளது.

இராணுவத்தினால் காணி ஆக்கிரமிப்பு, இராணு பொருளாதார நடவடிக்கைகள், தமிழ் பிரதேசங்களில் தென்பகுதி சிங்களவர்களின் அத்துமீறிய பொருளாதார நடடிவக்கைகள் (காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடல்வள சுரண்டல்), பௌத்த மத விரிவாக்கம் மற்றும் இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிற்கு இராணுவமயமாக்கல் ஒரு முக்கிய காரணியாகும். இப்பிரதேசங்களில் நிலவும் இராணுவ அதிகாரமானது பொலிஸ் தரப்பின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆதாரமாயுள்ளதுடன் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கும் நீதித்துறை அச்சுறுத்தப்படுவதற்கும் காரணமாயுள்ளது. அத்துடன் உளவுப்பிரிவினர் மக்களின் அன்றாட சமூக வாழ்வில் ஒன்று கலந்து மக்களின் சமூக நடவடிக்கைகளை தொடர் கண்காணிப்பிற்குள் வைத்திருப்பதற்கும் இராணுவ மயமாக்கமே அடித்தளமாயுள்ளது. குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினர் (பெண்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோர்) இராணுவமயமாக்கத்தினால் அதிகம் மீறல்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, இராணுவமயமாக்கலை முடிவுறுத்தும் நடவடிக்கைகளை அரசு உடன் மேற்கொள்ள வேண்டும். இதில் இராணுவத்தை சீரமைத்தல் மற்றும் குறைத்தல் முக்கிய அம்சமாகும்:
அ) பாரிய மனித உரிமை மீறல்களை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் அதனோடு தொடர்புபட்ட இராணுவத்தினரையும் உடனடியாக பதவிவிலக்கி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆ) இலங்கையின் ஆயுதப் படைகள் இளம் ஆண்களால் ஆனவையாகும். யுத்தம் முடிவுற்ற பின்னர் முகாம்களில் அபரிமிதமாக முடங்கியிருக்கும் இவர்களின் எண்ணிக்கையை 70வீதம் குறைத்து இவர்களை வேறு துறைகளில் ஈடுபடுத்த வேண்டும்
இதன் மூலம் வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைக்க முடிவதுடன் இராணுவத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தவும் முடியும்

•    அரசியல் கைதிகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையிருக்கும் அரசியல் கைதிகளை நல்லிணக்க நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி அரசு விடுவிக்க வேண்டும். நீண்டகால சிறையிருப்பின் பாதிப்புகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் சட்டமா அதிபரை விழித்து வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையை  கவனத்திற்கொள்வதுடன் சர்வதேச மனித உரிமை சட்டங்களையும் கவனத்திற் கொண்டு அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு ஆவண செய்யவேண்டும்.

•    தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கான தீர்வு அவசியம்
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையுடன் கூடிய அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவே 1950களில் இருந்து ஜனநாயக வழியில் தமிழர்கள் முன்வைத்து வந்த அரசியல் கோரிக்கை. இலங்கையில் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால்  தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது “மக்கள் தீர்ப்பின்” மூலம் கிடைக்கும் என்பதில் கேள்விகள் உள்ளன. எனவே ஏனைய நாடுகளின் படிப்பினைகளையும் புதிய மாதிரிகளையும் பின்பற்றி  தமிழரின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்

4.    இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான நேரடி பங்கேற்பு அவசியம்

2010 பின்னர் இலங்கையில் நிலைமாறுகால நீதியை முன்னெடுப்பதில் ஐ.நா. அதிக அக்கறை செலுத்தியதுடன் 2012இல் இருந்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இவற்றில் தீர்மானம் 30ஃ1  மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார் பணிக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் ஆகியன முக்கியமானவையாகும். எனினும் இலங்கை அரசினால் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் எதுவும் இதுவரையில் அமுலாக்கப்படவில்லை. மார்ச் 2017 காலநீடிப்பு வழங்கப்பட்டும் அரசு அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை. அத்துடன் 2019இல் இலங்கை விவகாரமானது ஐ.நா. நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒதுக்கப்படும் நிலையில் இலங்கை அரசு தமிழ் மக்கள் சார்ந்த தனது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானக் கடப்பாடுகளை முற்றாகக் கைவிடும் நிலையே ஏற்படும்.

அவ்வகையில், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு ஐ.நா.வின் நிபுணத்துவ ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்பு என்பதற்கும் அப்பால் அமுலாக்கலில் நேரடிப் பங்கேற்பு என்பதும் மிக அவசியமாகும். ஏனெனில், சிங்கள பௌத்த பெரும்பான்மைவாத அரச அடக்குமுறையினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கு அதே அரச இயந்திரத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. எனவே இது சார்ந்து ஐ.நா. இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள வேண்டும்.

5.    சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க  இரட்டை நீதிப்பொறிமுறைகள் – சர்வதேச விசாரணை மற்றும் உள்நாட்டில் கலப்பு நீதிப்பொறிமுறை – அவசியம்:

•    போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை விசாரிப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நேரடி தலையீடு அவசியம். இதில் ஐ.நா. தனது பாத்திரத்தை ஆற்ற வேண்டும். இலங்கைச் சூழலில் அரசியல் நலன்களை காத்துக்கொள்வதற்காக போர்க்குற்றங்களுக்கு மிகவும் பொறுப்பானவர்களை உள்நாட்டில் எந்த அரசாங்கமும்  விசாரணை செய்ய முன்வரமாட்டார்கள். இதுவே இலங்கை அனுபவம். எனவே, போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி “போர்க்குற்றங்களுக்கு மன்னிப்பு” என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

•    இலங்கை அரசு தான் தீர்மானம் 30ஃ1இல் ஏற்றுக்கொண்டதற்கு அமைய சர்வதேச நீதிபதிகளையும், சட்டத்தரணிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்ட கலப்பு நீதிப்பொறிமுறைகளை உருவாக்கி போhக்குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். இந்த குறுங்கால கலப்பு நீதிமன்றத்தை அமைக்க அரசினால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு நிலைமாறுகால நீதி அமைச்சகத்துக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்

6.    மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

நிலைமாறுகால நீதி கலந்துரையாடலை மக்கள் மத்தியில் முதன் முதல் கொண்டு சென்றவர்கள் மனித உரிமைப் பாதுகாவலர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஆவர். அத்துடன் தேசிய கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட மக்களை பங்கேற்க வைத்தது முதல் மக்கள் மத்தியில் தமது உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருபவர்கள் இந்த சிவில் சமூக தரப்பினராவர். எனினும், அரச புலனாய்வுத்துறையின் தொடர் கண்காணிப்பு, பின்தொடரல் விசாரணை மற்றும் அச்சுறுத்தல்கள், எங்கு சமூக நிகழ்வுகள் நடந்தாலும் அங்கு சென்று விசாரித்தல் ஆகியன மனித உரிமைப் பாதுகாவலர்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இன்றுவரையில் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பல்வேறு வகையில் இம்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு தொடர்;சியாக தொலைபேசி செய்வது, அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரிப்பது நடைபெறுகிறது. எனவே, மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை அரசு உடன் நிறுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு
இலங்கை
10 ஐப்பசி 2017