வடக்கு கிழக்கும் அரசியல் இடக்கு முடக்கும். Basheer Segu Dawood.

0
614

அரசாங்கம் சட்டத் திருத்தத்தைச் செய்து மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாது ஒத்திப்போடுவதற்குத் தோல்விப் பயமே காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. மக்கள் இதை நம்பவும் செய்கிறார்கள்..

தோல்விப் பயம் இருந்தாலும், கிழக்கு மாகாணத்துக்குத் தனியாக இப்போது தேர்தலை நடாத்தினால் அது அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நடவடிக்கைக்குக் குந்தகமாக அமையும் என்பதே ஒத்திப் போடலுக்கான பிரதான காரணமாக இருக்கலாம்.தேர்தல் நடந்து கிழக்குக்கென்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை உருவாகிவிட்டால் உடனே இச்சபையைக் கலைப்பதில் சட்டச் சிக்கல்கள் தோன்றுவதோடு, 5 வருடங்களுக்கு வடக்கும் கிழக்கும் தனித்தனிச் சபைகளாகவே இயங்கவேண்டி வரும். அடுத்த வருடம் வடக்கு மாகாண சபை கலையும் போது அதற்கும் தனியே தேர்தல் நடாத்தவேண்டி ஏற்படும்.

இந்தக் குந்தகமான நிலைமையைக் கையாளுவதற்காகத்தான் நிறைவேற்ற முடியாது போன 20 ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்குப் பாராதீனப்படுத்தப்பட்டிருந்தது.இத்திருத்தச்சட்டம் நிறைவேறியிருந்தால் பாராளுமன்றம் நினைத்த உடனே எந்த ஒரு மாகாண சபையையும் கலைத்திருக்க முடியும். இச்சட்டத்துக்குத்தான் கலைந்த கிழக்கு மாகாண சபை சம்மதம் தெரிவித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவர்களது கொள்கைக்கு ஏற்ப வடகிழக்கு இணைப்புக்கு வழி சமைக்கும் வகையிலே தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ன உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆதரவு வழங்கினார்கள் எனத் தெரியவில்லை.

புதிய அரசமைப்பு நிறைவேற சர்வஜன வாக்கெடுப்பு வெற்றி பெற்றாக வேண்டும்.இவ்வாக்கெடுப்பை அவசரமாக நடாத்தவும், அதில் வெற்றி பெறுவதற்கும் அரசு கடுமையான பிரயத்தனத்திலும், சோதனையிலும் இறங்கியுள்ளது. மேலும் அரசு பல தந்திரோபாயங்களையும் பிரயோகிக்கிறது. நாடாளுமன்றில் தேசிய அரசையும், நிறைவேற்று ஜனாதிபதி மைத்திரியையும் புதிய யாப்புருவாக்கதினாலும் இதற்கான சர்வஜன வாக்கெடுப்பின் வெற்றியினாலுமே காப்பாற்ற முடியும்.

இரண்டரை வருடங்களாக நடாத்தாமல் வைத்திருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இனியும் நீண்ட காலத்துக்கு ஒத்திப் போட முடியாது. இவ்வளவு காலமும் சட்டரீதியாகச் செயற்கையான தடைகளை ஏற்படுத்தி இத்தேர்தலை ஒத்திப்போட்டு வந்த அரசாங்கம், தற்போது ஏற்பட்டுள்ள அவசரத் தேவையின் நிமித்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தின் மூலம் நேற்று இந்த தடைகளை நீக்கியுள்ளது.

இச்சட்டத்திருத்தத்தினாலும், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள நுட்பங்களினாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஓரளவு சாதக நிலையும் ஏற்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சரத் என் சில்வா தாக்கல் செய்துள்ள வழக்கு எதிர் வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு சட்டத் திருத்தத்தை நீதிமன்றம் இல்லாது செய்ய முடியாது என்பதை சரத் நன்கறிவார். எனவே, அவரது இலக்கு இச்சட்டத் திருத்தத்தை இல்லாது செய்வதல்ல மாறாக மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு நீதிமன்ற ஆணையைப் பெறுவதேயாகும்.இவ்வழக்கின் இடையீட்டு மனுதாரராக சுமந்திரனும் இணைந்துள்ளளார். இது சிங்களத் தேசியத்துக்கும், தமித்தேசியத்துக்கும் இடையில் நிகழ்ந்த ஆயுதப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இவ்விரு சக்திகளுக்கிடையிலும் ஒரு பலமான நீதித்துறைப் போர் புதிதாகத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியமை ஒரு “அறிவியற்தனமான நேர்மையீனத்தினால்” விளைந்ததாகும். இரண்டு பக்கமாக இருந்த திருத்தம் தொடர்பான ஆவணம் குழு நிலையில் 32 பக்க ஆவணமாக நிறைவேறியமை நமது 70 வருட கால சுதந்திர நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக நடந்த அதிசயமாகும்.

இவ்வழக்கின் தீர்ப்பு தற்சயலாகவேனும் மாகாணத் தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டும் என அமைந்தால், தேர்தல்கள் ஆணைக் குழு நீதிமன்றத் தீர்ப்புக்குப் பணிந்து மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தவேண்டி ஏற்படும். இதனையும் தடுப்பதற்கு அரசு தனது புத்தி ஜீவித்தனமான நேர்மையீனத்தை மீண்டும் கையில் எடுக்கவும் கூடும். அரசுக்கும் – நீதித்துறைக்கும் இடையிலான புடுங்கல்கள் புது வடிவெடுக்கவும் வாய்ப்புண்டு. பொறுத்திருந்து பார்ப்போம் எது எதற்கு கட்டுப்படுகிறதென்று.

இப்புதிய அரசியல், இராஜதந்திர, நீதித்துறை சார்ந்த போர்ச் சூழலில் முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வு காணாமலாகி, யுத்த காலத்தில் எவ்வாறு அரசாங்கங்களுக்கு சாதகமாக முஸ்லிம்களின் உணர்வுகள் பயன்படுத்தப்பட்டனவோ அவ்வாறே இரண்டு பெரிய தேசியங்களுக்கிடையிலும் சமகாலத்தில் நடக்கும் இழுபறியிலும் அரசாங்கம் முஸ்லிம்களை அவர்களின் தலைமைகளுக்கூடாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுகிறது.தமிழ்த் தேசியம் சிங்களப் பேரினவாதத்தின் மென்போக்கைக் கடைப்பிடிக்கும் நல்லாட்சி அரசாங்கத்துடன் உபாய ரீதியாக ஒட்டி உறவாடுகிறது என்பது இரகசியமல்ல. இதற்கிடையில் மஹிந்தவின் பௌத்த தேசியக் காய் நகர்த்தல்கள் எந்த முன்னரங்கைத் தகர்த்து முன்னேறப் போகிறதோ தெரியவில்லை. ஆயினும் இவரும் சந்தர்ப்பத்தைப் பார்த்து முஸ்லிம்களுக்கு வலை வீசத் தொடங்கிவிட்டார்.

எனவே, முஸ்லிம் அரசியல் சக்திகள் இரண்டு மென்போக்குத் தேசிய சக்திகளுக்கும் பணிவிடை செய்வதற்காகத் தயார்படுத்தப்பட்டுவிட்டன என்பதையும், யுத்தகாலத்தில் முஸ்லிம்களைப் பயன்படுத்திவிட்டு யுத்தம் முடிவடைந்த பின் அவர்களது அபிலாஷைகளை முன்னைய அரசுகளும், மஹிந்தவின் அரசும் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி வீசியதையும் கணக்கில் எடுத்து, எதிர்வரும் சர்வஜன வாக்கெடுப்பிலும்- ஏனைய தேர்தல்களிலும் முஸ்லிம் கட்சிகள் கூட்டமைத்துத் தனியாகச் செயல்படுவதற்குத் துணிய வேண்டும்.

Basheer Segu Dawood