‘விபுலாநந்தர் ஆக்கங்கள்’ தொகுப்பு நூல் குறித்து சிரேஸ்ட விரிவுரையாளர் றூபி வலன்ரீனா பிரான்சிஸின் அறிமுகவுரை

0
849

சுவாமி விபுலாநந்தரின் பிறப்பின் 125 ஆண்டு நிறைவையொட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஒக்டோபர் 05 – 07 ஆம் திகதி வரை நடத்திய சுவாமி விபுலாநந்தர் மாநாடு – 2017 நிகழ்வில் வெளியிடப்பட்ட ‘விபுலாநந்தர் ஆக்கங்கள்’ தொகுப்பு நூல் குறித்து றூபி வலன்ரீனா பிரான்சிஸ் (சிரேஸ்ட விரிவுரையாளர் மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்) ஆற்றிய அறிமுகவுரை
இவ்விழாவில்; சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் வெளியிடப்படுவது மிக முக்கிய அம்சமாகும். தொடக்கவிழாவிலே ‘யாழ்நூலும்’, ‘மதங்க சூளாமணியும்’ வெளியிட்டு வைக்கப்பட்டன. இன்றைய நிறைவுவிழாவிலே அடிகளாரின் கட்டுரைகளும், கவிதைகளும் அடங்கிய தொகுப்புக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனி இரு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
அடிகளாரின் ஆக்கங்கள் சில இதற்கு முன்னரும் ஆங்காங்கே வெளியிடப்படடிருக்கின்றன. அருள். செல்வநாயகத்தின் முயற்சியும் இதனுள் அடங்கும். இதைத் தவிர குறிப்பிடத்தக்கதும் முதன்மையானதுமான முயற்சியாக அமைந்தது, மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையினர் நான்கு தொகுதிகளாக வெளியிட்ட ‘சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்’ என்னும் தலைப்பிலான தொகுப்பு நூல்களாகும்.
அடிகளின் பெரும்பாலான ஆக்கங்களைத் தேடி அவற்றை காலவரன்முறைப்படி ஒழுங்கமைத்து முறையாக அதனைப் பதிப்பிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் இருவர். இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ. கமலநாதன், இலக்கிய கலாநிதி வ. சிவசுப்பிரமணியம் ஆகியோரே அவர்கள். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அவர்களது அளப்பரிய பணியினை நினைவு கூர்ந்து இவ்விழாவில் அவர்களுக்கு தேகாந்த நிலையில் கௌரவத்தினை வழங்கியிருந்தது.
அந்த நான்கு தொகுதிகளுள் முதல் மூன்று தொகுதிகளும் ஆங்கிலத்திலும் தமிழிலும் அடிகள் எழுதிய கட்டுரைகளையும் நான்காவது தொகுதி கவிதைகளையும் உள்ளடக்கியனவாகும். முதலிரு தொகுதிகளும் 1995 இலும், மூன்றாவது தொகுதி 1997இலும் நான்காவது தொகுதி 1999இலும் வெளிவந்திருந்தன.
அவ்வேளை இருந்த பொருளாதார நிலைமை மற்றும் வசதியீனங்கள் ஒரே தொகுதியாகவும் செம்மையான வடிவத்திலும் அடிகளாரின் ஆக்கங்களை வெளிக்கொணர்வதனைச் சாத்தியப்படுத்தியிருக்கவில்லை.
இத்தகைய பின்னணியிலேயே அவற்றை நிவர்த்தி செய்து பலரது கைகளையும் எட்டக்கூடியதாக இன்று இத்தொகுதி வெளிவருகின்றது.
தமிழில் அமைந்த 121 ஆக்கங்களும் ஆங்கிலத்தில் அமைந்த 29 ஆக்கங்களுமாக 150 ஆக்கங்களை இத்தொகுதிகள் உள்ளடக்கியுள்ளன. இரு மொழிகளிலும் தனித்தனியாகப் பகுக்கப்பட்டிருப்பது குறிப்பிட்ட மொழிமூலமான படைப்புக்களைத் தனித்துவமாக ஆய்வு செய்ய விழைவோருக்கும் ஒரு குறிப்பிட்ட மொழிமட்டுமே தெரிந்தோருக்கும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.
அவரது ஆக்கங்களுள் 1914இல் அவரால் எழுதப்பட்ட Our Infant Department என்ற தலைப்பிலான கல்வி தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கிய ஆங்கிலக் கட்டுரையே முதலாவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுகிறது. அவ்வேளை மட். புனித மிக்கேல் கல்லூரியில் அவர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதும் அங்கு அவர் கல்வி கற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கன.
மொழி, கவிதை, நாடகம், ஓவியம், வரலாறு, சமயம், விஞ்ஞானம் எனப் பலதுறை சார்ந்த கட்டுரைகளை அடிகள் எழுதியுள்ளார். இக் கட்டுரைகள் செந்தமிழ், தமிழ்ப்பொழில், கலைமகள், செந்தமிழ்ச்செல்வி, ஈழகேசரி முதலான இதழ்களிலும் அவர் ஆசிரியராகப் பணியாற்றிய பிரபுத்த பாரத, வேதாந்தகேசரி, இராமகிருஷ்ண விஜயம் முதலான பத்திரிகைகளிலும் வெளிவந்தவை. அத்துடன் முக்கியமான சங்கங்களினது கூட்டங்களிலும் அவர் உரையாற்றியுள்ளார். சைமன் காசிச்செட்டியின் Tamil Plurach (இரண்டாம் பதிப்பிற்கு), நவநீதகிருஷ்ணபாரதியின் ‘உலகியல் விளக்கம்’ முதலான பல நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அவ்வணிந்துரைகள் ஆராய்ச்சியுரைகளாகவும் உள்ளன. அறிஞர்களுடன் கடிதங்களிலும் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இத்தொகுதிகள் அவற்றை உள்ளடக்கியுள்ளன. அடிகளால் எழுதப்பட்டு முற்றுப்பெறாத நிலையிலுள்ள ‘மேற்றிசைச் செல்வம்’, ‘விஞ்ஞான தீபம்’ ஆகியனவும் இத் தொகுதியில்; அடங்கும்.
அடிகளின் பல்பரிமாணத் திறன்களை இவ்வாக்கங்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. தேசம், மொழி, சமயம் என்பன அவரது சிந்தனையின் அடிநாதமாக அமைந்திருந்தமையை இவை எடுத்துக்காட்டுகின்றன. ‘விபுலாநந்தர் மொழிநடை’ என்னும் தனித்துவமான நடையியலை, தான் பயன்படுத்திய செம்மையான உரை உயர்நடையின் மூலம் தமிழுலகிற்கு அடிகள் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பழமையைப் போற்றி அதனூடாகத் தமிழரின் தொன்மையான வரலாற்றை மீட்டெடுக்க முயற்சித்த விபுலாநந்த அடிகள், புதிய செல்நெறிகளுக்கான ‘கைகாட்டியாகவும்’ செயற்பட்டதன் மூலம் பழமைக்கும் புதுமைக்குமான பாலமாக மிளிர்வதனை அவரது ஆக்கங்கள் நிறுவியிருக்கின்றன.
ஆராய்ச்சிக் கருவூலமாக விளங்கும் அடிகளின் ஆக்கங்களை தன்னளவின் நிலைநிறைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளிக்கொணர்ந்திருக்கின்றது. கல்விப்புலத்தின் தோள்களுக்கு அவற்றைத் தந்திருக்கின்றது. இனி அடுத்த கட்டம் என்ன? அவற்றைத் தோள்களில் ஏற்று அப்பொறுப்பை மனமுவந்து சுமந்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை முன்னெடுக்கவும் ஆராய்ச்சிகளுக்ககு வழிகாட்டவும் போகிறோமா? வேறு தோள்களுக்கு மாற்றிவிட்டு வாளாவிருக்கப் போகிறோமா? அல்லது அப்படியே விட்டுவிடப் போகிறோமா?
தொடக்க விழாவின் நூல் அறிமுகவுரையில் கலாநிதி க.இரகுபரனும் இரண்டாம் நாள் ஆய்வரங்கில் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் விபுலாநந்த அடிகளின் ஆக்கங்களின் எதிர்காலம் குறித்த எழுப்பிய வினாக்களை இங்கு மீள நினைவூட்டுவது பொருத்தமானது என நினைக்கின்றேன்.
கிடைத்தற்கரிதாகவிருந்த யாழ்நூல் முதலானவை இப்போது கைகளில் கிடைப்பது சாத்தியமாகியிருக்கிறது. விபுலாநந்த அடிகளின் காலத்திலும் அதற்குப் பின்னரான 50 – 60 வருட காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப் பின்னரான அடுத்த தலைமுறை அடிகளின் ஆக்கங்களையும், ஆய்வுகளையும் எந்தளவிற்கு கவனத்திலெடுக்கப் போகின்றது? எந்தளவிற்கு முன்னெடுக்கப்போகின்றது?
யாழ்நூலில் விவரிக்கப்பட்டுள்ள கணித விடயங்கள் பற்றி கவனத்திற் கொள்ளத் தேவையில்லை என்றும் இன்று இசை எவ்வளவோ முன்னேறிவிட்டதென்றும் சிந்திக்கின்ற தலைமுறையினர் மத்தியில் அதன் சாத்தியப்பாட்டை முன்னெடுக்கும் சவாலை எதிர்கொள்ளும் திறனுடையோர் உள்ளனரா?
அடிகளின் கவிதைகளிலே எளிமையானதும் இலகுவாகப் பொருள் விளங்குவதுமாக அமைந்துள்ளதெனக் கருதப்படுகின்ற ‘ஈசன் உவக்கும் இன்மலர்;’ என்னும் கவிதையே பிழையான புரிதல்களுடன் கல்விப் புலத்தில் பொறுப்பு வாய்ந்தவர்களால் அர்த்தப்படுத்தப்படுகின்ற சூழலில் கடின நடையில் அமைந்துள்ள கட்டுரைகளின் உட்பொருளை நுனித்துணர்ந்து அவற்றை ஏனையோர்க்கும் தெளிவாகக் கற்பிப்பது அல்லது எடுத்துரைப்பது சாத்தியமாகுமா?
1973இல் சுவாமி விபுலாநந்தரின் 12 கட்டுரைகள் அடங்கிய தொகுதி ‘இலக்கியக் கட்டுரைகள்’ என்னும் நூலாக க.பொ.த உயர்தரத்தில் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அதற்கான நோக்கம் பின்வருமாறு வரையறுக்கப்பட்டிருந்தது.
“ இந்நூல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய அறிவு, வரலாற்றறிவு என்பவற்றை உணர்த்தி ஆராய்ச்சி மனப்பான்மையைத் தூண்டக் கூடியவாறு அமைந்துள்ளது.”
நான் கல்வி கற்றபோது அப்பாடத்திட்டம் நடைமுறையில் இருந்தது. க.பொ.த உயர்தரத்தினை மட். புனித மிக்கேல் கல்லூரியில் நான் பயின்றேன். அப்போது அங்கு அதிபராகக் கடமையாற்றியவர் வித்துவான் சா.இ கமலநாதன் அவர்கள். அவரே உயர்தர வகுப்புகளுக்கான தமிழ்ப் பாட ஆசிரியராகவும் இருந்தார். சில ஆசிரியர்கள் வகுப்பைப் புறந்தள்ளி பிரத்தியேக வகுப்புக்களுக்காக மாணவர்களை ஊக்குவிக்கும் இன்றைய காலகட்டத்தில் அதிபர்களை வகுப்புகளில் எதிர்பார்ப்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க விபுலாநந்த அடிகளின் உரைநடை ஆக்கங்களை வாசிக்கவே இடர்ப்படும் பாடசாலைக் காலத்தில் அவற்றை சந்தி பிரித்துப் பொருளுணர்த்தி இலகுவாகப் புரிய வைத்த திறன் மிக்க எனது ஆசானை இவ்விடத்தில் நான் நன்றியோடு நினைவு கூருகின்றேன். அத்தகைய ஆளுமையும், அர்ப்பணிப்பும், புலமையுமுள்ள ஆசிரியர்கள் உருவாக வேண்டும்.
சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்களை மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை வெளியிட்டபோது அச்சபையின் தலைவராகப் பணியாற்றிய மதிப்பிற்குரிய க. தியாகராஜா அவர்கள் தொகுதி இரண்டிற்கான (1997) முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“அடிகளாரின் பல்கோணச் சிறப்பு போதியளவு ஆர hயப்படாமலேயே இன்றும் உள்ளன. இது எமது எதிர்காலப் பணியாக இருக்க வேண்டும். இப்பணியில் தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் பல்கலைக்கழகத்தினரும் ஈடுபட வேண்டும்.”
தற்போது வெளிவந்திருக்கும் இத்தொகுதிகள் மேற்கூறப்பட்ட பல்வேறுபட்ட மட்டத்தினருக்கும் கிடைக்கக்கூடிய சாத்தியப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதனால் முன்னரைவிட அடிகளாரின் ஆக்கங்கள் தொடர்பாக அதிகமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புக்கள் உள்ளன என நம்பலாம்.
இச்சந்தர்ப்பத்தில் தமிழுலகிற்கும் அறிவுலகிற்கும் பயன்தரு வகையில் இவ்வளப் பெரியதும் அரியதுமான பணியினைச் செவ்வனே ஆற்றிய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். பணிப்பாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களும் அவரது குழாத்தினரும் அர்ப்பணிப்புடன் இக் காரியங்களை முன்னெடுத்து சுவாமி விபுலாநந்தர் பிறந்த இந்த மட்டக்களப்பு மண்ணில் அடிகளுக்கு மேலும் கௌரவத்தை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
இறுதியாக சுவாமி விபுலாநந்தர் முன்வைத்துள்ள சில வினாக்களோடு இந்த உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்களுக்கு 07.02.1941இல் எழுதிய கடிதத்தின் இறுதியிலே பின்வருமாறு அடிகள் குறிப்பிட்டிருந்தார்.
“என்ன நூல் கற்று வருகின்றீர்கள்?
இந்நாட்களில் எத்தனை பாட்டு எழுதினீர்கள்?
என்ன ஆராய்ச்சி செய்து வருகின்றீர்கள்?
என நான் உங்களைக் கேட்கிறேன். அடுத்த கடிதத்தில் விரிவாக விடை எழுதவும்.
– அன்புள்ள விபுலாநந்தர்.”

அடுத்தடுத்த எத்தனங்களில் இக்கேள்விகளுக்கான பதிலை மிகச் சுருக்கமாகவேனும் எங்களால் தரக் கூடியதாக இருக்குமானால் இவ் வெளியீடுகளால் பயன் உண்டு.