கோழிக்குஞ்சால் பறிபோனதா? யோகராணியின் உயிர்

0
1870

(படுவான் பாலகன்)  யுத்தம் மௌனிக்கப்பட்டு 08வருடங்கள் கடந்து நிற்கின்ற நிலையிலும், அதனால் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்யாத அரசாங்கமாகவே நல்லாட்சி அரசு இருந்து கொண்டிருக்கின்றது. உயிர், உடமை, பொருளாதாரம், கல்வி, தொழிநுட்பம் என பலவற்றையும் இழந்து நிர்கதியாக நிற்கும் இனமாக இலங்கை நாட்டிலே தமிழ்மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாம் இழந்த வாழ்வாதாரத்தினைக்கூட எட்டிப்பிடிக்க முடியாமல் இன்றும் தொழிலுக்கும், இல்லிடத்திற்கும், உணவிற்கும் போராடுகின்ற மறுபக்கம் நீதி கேட்டு நிற்கின்ற சமூகமாகவும் இருந்து கொண்டிருக்கின்றனர். அதிகம், வறுமையிலே வாடுகின்ற மக்களாவே தமிழ் மக்கள் இன்றுவரை இனங்காட்டப்பட்டு வருகின்றனர். இருபந்தைந்து மாவட்;டங்கள் உள்ள இலங்கை நாட்டிலே, வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் இருந்துகொண்டிருக்கின்றது. அதேவேளை இலங்கையிலே வறுமை கூடிய பிரதேச செயலகம், மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள மண்முனை மேற்கு பிரதேச செயலகம் என்பதனை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
வறுமை கூடியதாக சுட்டிக்காட்டப்படுகின்ற மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவானது, கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ், இருந்த பிரதேசமாகும். கடந்த 30வருட கால யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை இப்பிரதேசம் கொண்டிருக்கின்றது. இங்குள்ள மக்களும் பெரும்பான்மையானவர்கள் கூலிவேலை, விவசாயம் போன்றவற்றினையே செய்து வருகின்றனர். ஒருநாள் வேலைக்கு சென்றால்தான், அவர்களின் வீட்டில் விளக்கெரியும். இவ்வாறான பிரதேசத்தில் கொத்தியாபுலை கிராமத்தில் உள்ள வாழைக்காலை எனும் இடத்தில் வசித்துக்கொண்டிருந்த 22வயதினையுடைய இளம்தாயின் உயிர் அண்மையில் பறிபோனது.
ஆறு பிள்ளைகளில் மூத்த பிள்ளையாக, பிறந்த சண்முகசுந்தரம் யோகராணி என்ற இளம்தாய் பாம்புக்கடிக்கு உள்ளாகி மரணமடைந்தார். இவரின் இறப்பு பலருக்கு சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. பாம்புக்கடிக்கு உள்ளாகுவதென்பது இப்பிரதேசத்தில் சாதாரண விடயமென்றே குறிப்பிடமுடியும். ஏன்னெனில் காடுகளும், வயல்வெளிகளும் ஆங்காங்கு வீடுகளும், கொண்ட பகுதியாக இப்பிரதேசம் அமைந்திருக்கின்றது. அதேவேளை வீடுகளும், வைக்கோலும், சுற்றுவர களிமண்ணாலும் அமைக்கப்பட்ட வீடுகளுமே இப்பகுதியில் காணப்பட்டன. ஆனாலும் நிறுவனங்களின் உதவியினால் வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. பாதுகாப்பற்ற வீடுகளில் வசித்தமையினால் பாம்புக்கடிக்கு கடந்த காலங்களிலே பலர் உள்ளாகினர். இதற்கான சிகிச்சையைப் பெறுவதற்கு கூட இப்பிரதேசத்திலே வைத்தியசாலைகள் வசதியுடன் இருக்கவில்லை. இதனால் விசக்கடி வைத்தியரையே நம்பி வாழ்ந்தனர். பலரும் காப்பாற்றப்பட்டனர். இன்றும் இப்பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாகவே இருந்துகொண்டிருக்கின்றது.
பாதுகாப்பற்ற வீடுகளிலேயே வாழ்ந்தமையினால், பல உயிர்களை பறிகொடுத்த இப்பிரதேசம். இன்றும் பாதுகாப்பற்ற வீடுகளிலே சிலர் வாழ்வை வழிநடத்திக் கொண்டு செல்கின்றனர். அதற்கு விதிவிலக்கற்றவராக யோகராணியும் இருக்கவில்லை. யோகராணியின் வீடும் பாதுகாப்பற்ற வெறும் கொட்டில் வீடே. இதில்  வாழ்க்கை நடாத்தி வந்த யோகராணிக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் இருக்கின்றார். இவளது கணவன் அன்றாடம் கூலிவேலை செய்கின்றவராவார். செப்டெம்பர் மாதம் 22ம் திகதி வழமைபோன்று வீட்டிலே இரவு வேளையில் யோகராணி, யோகராணியின் கணவன், குழந்தை ஆகிய மூவரும் உறக்கத்திற்கு சென்றனர். மறுநாள் காலைப்பொழுது எழுந்து பார்க்கும் போது, குழந்தை அழுதுகொண்டிருக்கின்றது. தாய் எழவில்லை. யோகராணியின் கணவன் யோகராணியை எழுப்பிய போது, அவள் எழவில்லை. மண்ணைவிட்டு சென்றுவிட்டாள். பின்னர் அவளின் உடலில் பாம்பு கடித்த தடயங்கள் காணப்பட்டன. பின் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, பாம்பு தீண்டி இறந்தமை நிருபணமானது.

 

பாதுகாப்பு அற்ற வீட்டிலும், மின்சாரமின்றி, குப்பி விளக்கிலே வாழ்ந்து கொண்டிருந்த யோகராணி மரணிப்பதற்கு முன், தனது வாழ்வாதாரத்திற்காக கோழிகுஞ்சிகளையும் கொள்வனவு செய்து, அவற்றினை பராமரிப்பதற்கு அதற்கான இடமின்மையினால் தனது படுக்கை அறையினிலேயே வைத்துக்கொண்டே உறங்கியுள்ளார். கோழிக்குஞ்சை தேடிவந்த பாம்பு யோகராணியை தீண்டியிருக்க முடியும். என்பதும் அங்குள்ளவர்களின் கருத்தாகவும் இருக்கின்றது. இவ்வாறு வறுமையின் பிடியில் வாழ்க்கையை நடாத்திவந்த நிலையில் இவளது சடலத்தினை கூட அடக்கம் செய்வதற்கு அவளது வீட்டில் வசதியிருக்கவில்லை. சுவிஸ் நாட்டை மையமாக வைத்து இயங்கும் முனைப்பு நிறுவனமும் அந்த சமூகமே அவளது சடலத்தினை அடக்கம் செய்ய உதவியது.

யோகராணியைப் போன்று, பலர் இன்றும் இப்பிரதேசத்திலே வறுமையின் பிடியில் சிக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு இந்த நாட்டிலே தொழிலின்றி கடன்பெற்று மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடி சென்று, கடனை அடைத்துவிட்டு மீண்டும் நாடு திரும்பி வீட்டிலே எவ்வித முன்னேற்றமும் இன்றி தவிர்க்கின்ற, இதனால் வீட்டிலே பாடசாலை செல்லுகின்ற மாணவர்கள் பாடசாலையைவிட்டு இடைவிலகுகின்ற துர்ப்பாக்கிய சம்பவங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறான மக்களை கட்டியெழுப்புவதற்கு மக்கள் பிரதிநிதிகளும், நல்லாட்சி அரசும் முன்வர வேண்டும். இதுவே இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்புமாகும்.