வட.கிழக்கில் மீட்கப்படாத வெடி பொருட்களும்: அஞ்சி நிற்கும் மக்களும்.

0
635

– வயிரமுத்து துசாந்தன் –

இலங்கை நாட்டிலே யுத்தம் மௌனிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்தும், தமிழர்களின் வாழ்வில் மங்கலமான ஒளியோ, ஒலியோ இதுவரை முற்றாக தென்படவுமில்லை, கேட்கவில்லை. குரைத்து வரும் நாய்க்கு எலும்புத்துண்டை போடுவதுபோன்று, தமிழ் மக்கள் போராட்டங்கள் நடாத்துகின்றபோது அல்லது ஐ.நா கூட்டத் தொடரிற்கு முன்னதாக, சில விடயங்களை செய்வதாக காட்டுகின்றனரே தவிர இன்னும் அவைகளும் முற்றுப் பெற்றதாக தெரியவில்லை. காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்கான சட்டமூலம் வெகு விரைவாக நாடாளுமன்ற சபையிலே நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட வேகத்திற்கு, அதற்கான அங்கத்தவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அலுவலகமும் அமைக்கப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற ஐநா கூட்டத்தொடரில் அதற்கான அங்கத்தவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார். இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை.
வடக்கு, கிழக்கிலே கையப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை வழங்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராடி வருகின்றனர். அதற்கும் முழுமையான தீர்வு கிடைக்கப்பெறாமல் சிறியளவிலான காணிகள் விடுவிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. கைதிகளின் விடுதலை, நீதியான விசாரணை என கடந்த இறுதி யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். ஆனால் அதற்கான தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலும் நிறைவேறவில்லை. அதற்காக புதிய ஜனாதிபதி ஒருவரை எதிர்பார்த்தனர். அவ்வாறான ஒருவராக மைத்திரிபால சிறிசேன  அரியணையில் ஏற்றப்பட்டார். அரியணை ஏறி இரண்டு வருடங்கள் நிறைபெற்றும், இன்னமும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாக கட்டியெழுப்பப்படவில்லை. இன்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் வேதனையுடனே வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.
வாழ்வாதாரம் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற பகுதியிலே வெடிபொருட்கள் இன்றளவும் முற்றாக மீட்கப்படவில்லை. மக்கள் குடியேறி வாழ்கின்ற இடங்களில், அன்றாட வேலைகளில் ஈடுபடுகின்ற போது, வீட்டின் வாசல்களிலும், கிணறுகளிலும் இருந்து இன்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் மட்டும் வடக்கு கிழக்கில்; போருடன் தொடர்புடைய 10,000 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டது. அதேபோல  அதே ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர், மன்னார் -இலுப்பைக்கடவை பகுதியில் இருந்து மிதி வெடிகள் உட்பட ஒரு தொகுதி வெடி பொருட்கள் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது, கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் மலசலகூட குழியொன்றிலிருந்து கழிவுகளை அகற்றியபோது தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையாத வீடொன்றின் வளகாத்திலிருந்து இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் கன்னியா பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், மோட்டார் குண்டுகள்  12, எறிகுண்டுகள் 11, மற்றும்  பல ரக குண்டுகளும் மீட்கப்பட்டன.  வவுனியா மூன்றுமுறிப்பு தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் நீர் இறைத்து துப்பரவு செய்த போது கிணற்றுக்குள் இருந்து இரு தகரப் பெட்டிகளுள், ஜ.எம்.மோ கிளைமோர்- 01, மிதிவெடிகள்- 08, பரா வெளிச்சக்குண்டு- 04, டிக்னேற்றர்- 50 என்பன  மீட்கப்பட்டன. வவுனியா – நீலியாமோட்டை, சின்னத்தம்பனை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைக்குண்டு ஒன்று, மோட்டார் குண்டு ஒன்று, மிதிவெடி 41 போன்ற வெடிபொருட்கள்  மீட்கப்பட்டன.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஆட்சி ஆரம்பித்து  2016ம் ஆண்டு பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டு , தற்போதும்  2017லும் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  குறிப்பாக, நெல்லியடி –புலவரோடை பகுதியில், தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, அதிசக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டன, மட்டக்களப்பு- பாலயடித்தோணா பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதைக்கப்பட்ட நிலையிலிருந்த ரீ-56 ரக தன்னியக்கத் துப்பாக்கிகள் இரண்டு மெகசின் ஒன்று மற்றும் 176 ரவைகளும் பொலித்தீன் பையிலிட்டு புதைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் ஆர்.பி.ஜி-10, கிரனைட்-34, மிதிவெடி மற்றும் மோட்டார் ஆகியன அடங்குகின்றன. இவை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டன. கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில்; ஒருதொகுதி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வலி வடக்கு தையிட்டி அரசடிப் பிள்ளையார் கோயிலை அண்மித்துள்ள காணி ஒன்றைத் துப்பரவு செய்யும் போது அங்கிருந்த கிணற்றை உரிமையாளர் இறைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது பெருமளவு ஆயுதங்கள் அவதானிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பிரதேச காட்டுப்பகுதியில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டன. காங்கேசன்துறைப் பிரதேசத்தில் நபர்களைத் தாக்கியொழிக்கும் 210 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து 03 கைக்குண்டுகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன. உப்பமாவேலி பிரதேசத்தில் இராணுவத்தினரால்  81 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுத்தனர். யாழ்ப்பாணம் மற்றும் பளை பொலிஸாரினால் அரியாலை, ஐய்யகச்சி பிரதேசங்களிலிருந்து 2 கைக்ககுண்டுகள் மற்றும் 81 மிமீ குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. கோம்பாலில் பிரதேசத்திலிருந்து 120 மிமீ மோட்டார் குண்டொன்று மீட்டெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பிரதேசத்திலிருந்து 60மிமீ வகை மோட்டார் குண்டுகள் 54 மீட்டெடுக்கப்பட்டது. பாதுகாப்பு படையினரால் வட்டுவாகல் பிரதேசத்திலிருந்து கைத் துப்பாயின் கீழ் பாகம் 04 மெகசின்கள் , 16 துப்பாக்கி ரவைகள் மற்றும் 02 கைக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
உடையார்கட்டுகுளம் பிரதேசத்தில் இருந்து அடையாளம் தெரியாத துப்பாக்கி பாகங்கள், 81 மிமீ 02 மோட்டார் குண்டுகளும், 60 மிமீ 02 மோட்டார் குண்டுகளும், 60 மிமீ 02 மோட்டார் குண்டுகளின் 03 பாகங்களும், 60 மிமீ மோட்டார் குண்டுகளின் (ஃபியூஸ்) பாகங்கள் 03ம் வெடிகுண்டுகளும் கண்டு பிடித்துள்ளனர். கேப்பாபிலவு பிரதேசத்திலிருந்து 81 மிமீ மோட்டார் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முன்னிமுறுப்பு மற்றும் தட்டியாமலை போன்ற பிரதேசங்களிலிருந்து ஏழு கைக் குண்டுகள் மற்றும் அடையாளம் தெரியாத வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டன. வவுனியா பிரதேசத்திலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கைவேலி மற்றும் வெள்ளப்பல்ல பிரதேசத்திலிருந்து 60 மிமீ 13 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து 12.7 ஒ 108மிமீ ரவைகள் 2622ம், 7.62 ஒ 54மிமீ எம்பிஎம் ஜீ ரவைகள் 2000ம், 7.62 ஒ 51மிமீ எம்பிஎம்ஜீ ரவைகள் 581ம் மற்றும் 7.62 ஒ 39மிமீ டி-56ரவைகள் 110ம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து ஆர்.பி.ஜி குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக வெடி பொருட்கள் வடக்கு, கிழக்கிலே மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில்  ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாக வனவள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது  ஆளுகைக்குள் காணப்படுகின்ற  காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு  ஆபத்தான வெடிபொருட்கள்  காணப்படுவதனை அவதானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிபொருட்கள்  மனிதர்களுக்கும் , விலங்களுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்திலே தென்னமரவாடி பிரதேசத்திலிருந்து வெடிகுண்டு அகற்றும் படையினரால் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டுக் கொண்டுவருகின்றன. கிழக்கு மாகாணத்திலே வெடிகுண்டு அகற்றும் படையினரால் போகமுயாய பிரதேசத்திலிருந்தும் பல வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிட்ட சில இடங்களில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்ற அதேவேளை யுத்தத்தின் போது, இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேறி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற இல்லிடங்களிலும், விவசாய காணிகளிலும் வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றமை ஆபத்தானதொன்றே. தாம் வாழ்ந்த வீட்டிலே மீண்டும் குடியேறியிருக்கின்ற மக்கள் வீட்டிலே பள்ளம் வெட்டுவதற்கு  கூட அஞ்சவேண்டிய நிலை காணப்படுகின்றது. இதற்கு இல்லிடங்களிலே மீட்கப்படும் வெடிபொருட்கள் காரணமாகின்றன. அண்மையில் கூட முல்லைத்தீவில் வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டது. இவ்வாறு அன்றாட வேலைகளை செய்யும் போது மண்ணின் கீழிருந்து வெடிபொருட்கள் இனங் காணப்படுகின்றன. அவ்வாறான அன்றாடவேலைகளின் போது, வெடிக்காத வெடிபொருட்கள் நிலத்தின் கீழ் இருந்து அவதானமற்ற செயற்பாடுகளினால் வெடிப்பதற்கும் கூட சந்தர்ப்பமிருக்கின்றது. இதனால் பாதிக்கப்படபோகின்றவர்கள், கடந்த யுத்தத்திலே பாதிக்கப்பட்டு மீண்டுவரமுடியாத மக்களேயாகும். காடுகளில் இன்றும் வெடிபொருட்கள் இருப்பதென்பதும் அங்குள்ள கால்நடையாளர்களுக்கும், விலங்குகளுக்கும், விறகுவெட்டச் செல்லுகின்றவர்களுக்கும் ஆபத்தினை விளைவிக்ககூடிய நிலைமையே ஆகும்.
நல்லிணக்கம், நல்லாட்சி என்பவற்றினை ஏற்படுத்தி சுதந்திரமாக, ஒற்றுமையாக, ஒன்றுபட்டு அனைத்;து இன மக்களும் வாழ வேண்டுமென்ற உயரிய சிந்தனையுடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதாக குறிப்பிடும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், யுத்தத்தினால் இந்த நாட்டிலே அதிகம் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் பல பிரச்சினைகளில் சிறு பிரச்சினைகளுக்குக் கூட முற்றாக தீர்வினை வழங்க தவறியிருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்ற போராட்டங்கள் உணர்த்தி நிற்கின்றன. துன்பபட்டு உழைத்து ஒருநாள் தேவைக்கான உணவை பெற்றாலும், நிம்மதியாக வீட்டில் இருக்க முடியாத நிலையினை வாழ்விடங்களிலிருந்து மீட்கப்படாமலிருக்கும் வெடிபொருட்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. வாழ்விடங்களில் உள்ள வெடிபொருட்கள் முற்றாக மீட்கப்படாமையென்பது, அரசு நிறைவேற்ற தவறியிருக்கின்ற பல பிரச்சினைகளுள்  ஒன்றாகும். எட்டு வருடங்களுக்கு முன் வெடிபொருட்கள் தம்மை நோக்கி வருகின்றதா என சத்தத்தினையும், அவைவரும் திசையை நோக்கி அவதானித்து, அதற்கேற்றாற் போன்று தப்பித்தும், சில நேரம் அகப்பட்டும் கொண்ட மக்கள், தற்போது, எங்க எங்கு எப்படி எவ்விடத்தில் வெடிக்குமோ என்று தெரியாமல் சொந்த மண்ணில்  கால்வைப்பதற்குகூட அஞ்சும் நிலைமை இந்த ஆட்சியிலும் இருப்பதென்பது கவலையானதொன்றாகவே நோக்கப்படுகின்றது.
வெடிச்சத்தங்களும் அதனூடான அழுகுரல்களும் ஓய்ந்து இனிவரும் காலங்களில் இந்த நாட்டிலே இதுபோன்ற ஒலிகள் கேட்க கூடாது என மக்கள் வலியுறுத்தி வருகின்ற சூழலில், தமது வாழ்விடங்களில் வெடிபொருட்கள் மீட்கப்படாமலும் மீட்கப்படும் போது அபாயங்களை எதிர்நோக்கியுமே மக்கள் வாழ்ந்துவருகின்றனர். தமிழ் மக்கள் கோரிநிற்கின்ற பல்வேறு கோரிக்கைகளில், இவ்வாறான மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள விடயங்களை விரைவாக  செய்ய வேண்டியது அரசின் பிரதான கடமையாகும். இவற்றினை விரைவில் நிறைவேற்றுவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.