ஆலோசனைக்கு எதிர்மாறாகவே மட்டு.மாநகரசபை செயற்பட்டது.

0
661

(படுவான் பாலகன்) மக்கள்பிரதிநிதிகள், அரச அதிபர் அதோடு இணைந்த அதிகாரிகள் எல்லோரும் ஒன்றுகூடி முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராகவே மட்டக்களப்பு மாநகரசபை செயற்பட்டது. என மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பிரதி அமைச்சருமான ஏ.எச்.எம். அமீர் அலி தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று(28) வியாழக்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் அங்கு, கூறுகையில், பிரச்சினைகள் எழுகின்றபோது மக்கள்பிரதிநிதிகள், அதிகாரிகள் எல்லோரும் கூடி தீர்மானத்திப்பெற்று சிறப்பாக செய்ய வேண்டுமென்பதில் பல அதிகாரிகளுக்கு உடன்பாடில்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்பெருந்துறை திண்மக்கழிவு அகற்றும் பிரச்சினையினை, மாவட்டத்தினுடைய முக்கிய பிரச்சினையாக பார்க்கின்றோம். அப்பிரச்சினைக்கு மாவட்ட அரசியல் தலைவர்கள் எல்லோரும் கூடி ஆலோசனைகளை முன்வைத்தோம். ஆனால் நாங்கள் கூறிய விடயங்களுக்கு, எதிர்மாறானவற்றைத்தான் மாநாகரசபையினர் செயற்படுத்தினர். இதனால் பாதிக்கப்படுவது மாவட்டத்திலுள்ள பொதுமக்களேயாகும்.
மக்கள்பிரதிநிதிகள், அரசஅதிபர், அதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் இணைந்து எடுக்கின்ற தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தாதினால் பிரச்சினைகள் உண்டாகின்றது. அவ்வாறான செயற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால், அதிகாரிகளின் பெயர்களை கூட்டங்களில் கூறவேண்டியேற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே இப்பிரச்சினையிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் இந்தமாவட்டத்திலே இருக்கின்றனர். வேறு இடங்களுக்கு செல்வதில்லை. இதனால் இவர்களுக்குள்ளே உற்பத்தி திறனை எதிர்பார்க்க முடியாது. எல்லா இடங்களுக்கும் சென்றுவர வேண்டும் அப்போதுதான் உற்பத்திகளை பெறமுடியும். என்றார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.