முன்னர் இலங்கைக்கு தொழில்தேடி வந்தனர் இன்று இலங்கையர் தொழில் தேடி செல்கின்றனர்.

0
605

(படுவான் பாலகன்)  இலங்கையைப் போல் அபிவிருத்தியடைய வேண்டும் என நினைத்த நாடுகளெல்லாம் இலங்கையைவிட பலமடங்குகள் முன்னேறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். தற்போது வேறுநாட்டிற்கு இலங்கையர்கள் தொழிலுக்காக செல்லுகின்றனர். தொழிலாளர்கள் மட்டுமல்ல அகதிகளும் செல்லுகின்றனர். இதனால் எங்களை சர்வதேச சமூகத்தினர் குறைத்துமதிப்பிடுகின்ற நிலையிருக்கின்றது. இதனை அனுபவத்திலும் அனுபவித்திருக்கின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

 
பட்டிப்பளைப் பிரதேசத்திற்கான விவசாய ஆரம்ப கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(22) நடைபெற்ற போது, தலைமையுரையிலே இதனைத் குறிப்பிட்டார்.

 
தொடர்ந்தும் அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
விவசாய துறையை வளர்ப்பதற்காக பல்வேறான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மண்ணிலே இருக்கின்ற அத்தனை வளங்களையும் பயன்படுத்தி சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக பல திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றனர்.
கடந்த முப்பது வருடகால யுத்ததில் உடமைகளையும், உயிர்களையும், சொத்துக்களையும் இழந்தது மட்டுமல்ல முன்னேற்றத்தினை, மற்ற நாடுகள் பெற்றுள்ள விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியை இழந்திருக்கின்றோம். இவற்றினை எட்டிப்பிடிக்க வேண்டிய சமூகமாக இருக்கின்றோம்.

 
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவில் , 748மில்லியன் மக்கள் வறுமையில் வாடியிருந்தார்கள். மூன்று வருடத்திற்குள்ளே 175மில்லியனாக குறைத்திருக்கின்றனர். அவ்வாறான 175மில்லியன் மக்களின் வறுமையை போக்குவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே தேவை என்பதனை குறிப்பிட்டிருக்கின்றனர். அதிக சனத்தொகை கொண்ட சீனாவே கம்பீரத்தோடு எழுந்து நிற்கின்றதென்றால், விவசாயமும், கைத்தொழிலும் அங்கு மேலோங்கி புரட்சியாக மாறியிருக்கின்றது. அமெரிக்காவின் தலா வருமானத்தினை ஒப்பிடும் அளவிற்கு அவர்களது தலா வருமானம் உயர்ந்திருக்கின்றது. வறுமையிலே வாடிக்கொண்டிருந்த எதியோப்பியா நாட்டின் தனிநபர் வருமானமும் எங்களது நாட்டின் தனிநபர் வருமானமும் ஒரே அளவிலே இருக்கின்றது. இவ்வாறான தருணத்தில் நாம் விளித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே எங்களது பிள்ளைகளுக்காக, எதிர்கால சந்ததிகளுக்காக அரசாங்கத்தின் அத்தனை கொள்கைகளையும் உள்வாங்கி, வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும். என்றார்.