சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கொணிக்ஸ் தமிழ்ப் பள்ளியின் 20ஆவது அண்டுவிழா.

பேர்ண் மாநகரில் நீண்ட காலமாகச் செயற்பட்டுவரும்; கொணிக்ஸ் தமிழ்ப் பள்ளியின் 20ஆவது ஆண்டுவிழா அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொணிக்ஸ் மேல்நிலைப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் க. பார்த்திபன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ந. நாகேஸ்வரன் தலைமை தாங்கிய இந் நிகழ்வில் ஞானலிங்கேச்வரர் ஆலய அருட்சுனைஞர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், தமிழ்க் கல்விச்சேவையின் பேர்ண் மாநில இணைப்பாளர் சி. இலட்சுமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்வுகளாக மாணவர்களின் நடனம், நாடகம், கவிதை உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்ட சிறப்புப் பட்டிமன்றமும் இடம்பெற்றது. பள்ளியின் பழைய மாணவியான செல்வி பிரவின்சியா கொலம்பஸ் அவர்களின் இயக்கத்தில் உருவான அடையாளத்தை மறக்காதே என்ற தலைப்பிலான தமிழ் மொழிக் கற்றலின் சிறப்பை விளக்கும் குறும்படமும் நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
மழலைப் பிரிவு முதல் 10 ஆம் தரம் வரையிலான வகுப்புக்களைக் கொண்ட கொணிக்ஸ் தமிழ்ப் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 20 வருட காலத்தில் நூற்றுக் கணக்கான பிள்ளைகள் இப் பள்ளியில் தாய்மொழிக் கல்வியைப் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.