நீறுபோட்ட சேனையில் குளத்தின் அணைக்கட்டு திறந்து வைப்பு

0
852

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குழுவினமடு கிராமசேவையாளர் பிரிவின் நீறுபோட்டசேனை குளத்தின் அணைக்கட்டு திறப்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(21) இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் 2மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குளத்தின் அணைக்கட்டினை, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி கூறியதுடன், கடந்த காலங்களில் சிறுபோகத்தில் 25ஏக்கர் நெற்செய்கை மேற்கொண்டதாகவும், இனிவரும் காலங்களில் சிறுபோகத்தில் 50க்கு மேற்பட்ட ஏக்கரிலும், பெரும்போகத்தில் 150க்கு மேற்பட்ட ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ள எதிர்பாத்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த குளத்திற்கு, மழை நீர் மட்டுமே சேமிக்கப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டதுடன், குளத்திற்கு அண்மையில் புளுகுணாவை குளத்திலிருந்து பாய்கின்ற நீரின் வாய்க்கால் அமைந்துள்ளதாகவும்,  அதனை இக்குளத்திற்கு நீர் பாய கூடிய வகையில் அமைப்பதன் மூலமும், காடுகளில் இருந்து வருகின்ற நீரை குளத்திற்கு கொண்டுவருவதன் மூலமும் அதிக நீரினை குளத்தில் தக்க வைப்பதுடன், இன்னும் அதிகளவிலான நெற்செய்கையினை மேற்கொள்ள முடியும். இதை கருத்தில் கொண்டு நீரினை குளத்திற்கு கொண்டுவருவதற்கான வாய்காலினை அமைத்துதருமாறும் முன்னாள் ஜனாதிபதியுடன் விவசாயிகள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.  அதற்கமைய இதற்கான திட்டமுன்மொழிவினை தமக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் சர்வமத குருமார்கள், பிரதேச செயலாளர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.