இன ஒற்றுமையையும், சமாதானத்தையும் உருவாக்கி நாட்டை மீள கட்டியெழுப்பவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றேன்.

0
733

(படுவான் பாலகன்) இன ஒற்றுமையையும், சமாதானத்தையும் இந்த நாட்டிலே மீண்டும் உருவாக்கி இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதற்காகவே இந்த அரசாங்கத்தோடு நான் உறுதியாக உள்ளேன். என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குளுவினமடு கிராமத்தில் இன்று(21) வியாழக்கிழமை நடைபெற்ற சுயதொழில் உற்பத்தித் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்களும், ஆடு வளர்ப்பு பயனாளிகளுக்கு ஆடுகளும் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது, தெரிவுசெய்யப்பட்ட 25 செங்கல் உற்பத்தியாளர்களுக்கு, ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும், மூவருக்கு ஆடு வளர்ப்புக்கான ஆடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் உயிர்களும் உடமைகளும், அவர்களது வளங்களும் எந்தளவு அழிந்திருக்கின்றது என்பதை நான் அறிவேன். உட்கட்டமைப்பு ரீதியாகவும், மனிதவள வாழ்வாதார ரீதியாவும் மக்களை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில், தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளது. இப்போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் சில முயற்சிகளை செய்து வருகின்றோம். இந்நாட்டில் தொடர்ந்தும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்காக நான் இந்த அரசாங்கத்துடன் இருந்து செயற்படுவேன். எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அதிகாரிகள், சர்வமத குருமார்கள், பிரதேச செயலாளர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.