மக்களுடன் விளையாடும் மின்சார சபை

0
587

வாழைச்சேனை இலங்கை மின்சார சபையினரின் செயற்பாடுகள் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கிரான், கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கிரான், கோறளைப்பற்று மத்தி ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் தன்னுள் கொண்டு இயங்கும் வாழைச்சேனை இலங்கை மின்சார சபை நேர்த்தியான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில்லை.

எந்தவித அறிவித்தல்கள் இன்றியே இவர்கள் மின்சார துண்டிப்பை மேற்கொண்டு வருவதுடன், இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை துண்டித்து பின் இணைப்புகளை வழங்கி விளையாடுவது போல் செயற்படுகின்றனர்.

அத்தோடு திடீர் திடீரென மின் துண்டிப்பை ஏற்படுத்தி உடனே இணைப்பை வழங்குவதால் பாவனையாளர்களின் மின்சார உபகரணங்கள் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதுடன், மின்சார துண்டிப்பால் பல அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பன மக்கள் சேவையை திறம்பட செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.

அத்தோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என மக்கள் வாழைச்சேனை இலங்கை மின்சார சபையில் தொலைபேசி ஊடாக முறையிட்டால் இரவு நேரங்களில் அவற்றில் கரிசனை காட்டுவது குறைவாக காணப்படுகின்றது.

இதனால் எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுகின்றது. கல்வி மட்டத்தில் எமது மாகாணம் பின்தள்ளிக் காணப்படும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் கல்வியை பின்னடைவுக்கே கொண்டு செல்லக் கூடியதாக அமைகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு மரங்களை வெட்டும் மின்சார சபையின் ஊழியர்கள் மரங்களை வீதிகளில் போட்டுவிட்டு செல்வதால் வீதிப் போக்குவரத்துக்கு பாதிப்பு நிலவுகின்றது. இவ்விடயமாக பிரதேச சபைக்கு அறிவிக்காமல் மரங்களை வெட்டுவதால் பிரதேச சபையினர் மரங்களை ஏற்றிக் கொண்டு செல்வதில்லை.

ஆனால் நான்கு பிரதேசங்களில் இடம்பெறும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது மின்சார சபைக்கு ஏதும் பிரச்சனைகள் இருக்கின்றதா என கேட்கும் பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் இதனால் மக்களுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றது பற்றி கேட்பதில்லை.

முதலில் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து அவற்றினை தீர்த்து வைக்க வேண்டும். இல்லாதவிடத்து போராட்டங்கள் நடைபெற்ற பின்னர் ஏன் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்ற கூற்றை முன்வைக்க வேண்டாம்.

இவ்விடயமாக மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியிலாளர் மற்றும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் விடியலை முன்னேற்றுமாறு கேட்டுக் கொள்வதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.