வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் ?

0
674

அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்துவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானமும் இல்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக நடத்தப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வடமாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் தங்களால் எடுக்கப்பட்ட முடிவு சரியானதா? என்பது தொடர்பாக  எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு கூட்டமைப்பின் தலைவரான  இரா.சம்பந்தன் தொடர்ந்து பதிலளிக்கையில்;
அந்த முடிவு சரியானதுதான். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் . முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகின்றேன். பிரச்சினைகள் இருக்கலாம்.

ஆனால் அவரை ஏன் வடமாகாண சபை முதலமைச்சராக கொண்டுவந்திருந்தோம்? அவரைப் போல ஒரு முதலமைச்சர் வடமாகாணத்திற்கு வரவேண்டும் என்று நாம் உறுதியாக இருந்தோம். சில கருத்து வேறுபாடுகள் எம் மத்தியில் இருக்கலாம்.

எனக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பது எமக்கு பலமென்றே நான் நினைக்கின்றேன். எம்மை சமாளிக்கலாம் என்று எவரும் நினைத்துவிட முடியாது. நான் கதைக்காவிடிலும் வேறுசிலர் கதைக்க வேண்டும் என்றார்.
அவ்வாறெனில் அடுத்த தேர்தலிலும் முதலமைச்சராக விக்னேஸ்வரனை நிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்,  அவ்வாறு இல்லை; அப்படியொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.