2017ல் உள்ளூராட்சித் தேர்தல் இல்லை’

0
353

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் திகதியோ அல்லது அதற்குப் பின்னரோவோ நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

“கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, இவ்வாண்டு டிசெம்பரில், தேர்தல்களை நடத்த முடியாது. டிசெம்பர் 9ஆம் திகதி என எமக்குச் சாத்தியமான திகதியில் தேர்தல்களை நடத்த வேண்டாமென, பரீட்சைகள் ஆணையாளர், எம்மிடம் கோரியுள்ளார்” என்று, அவர் நேற்றுத் தெரிவித்தார்.

“டிசெம்பர் 30, 31ஆம் திகதிகளில், அரச கணக்காய்வுகள் நடப்பதன் காரணமாக, அந்தத் திகதிகளிலும் நடத்த முடியாது. இருக்கின்ற ஒரே வாய்ப்பாக, ஜனவரி நடுப்பகுதி காணப்படுகிறது. ஆனால் தைப்பொங்கல் காரணமாக, அந்நாளிலும் நடத்தப்பட முடியாது. எனவே, அதன் பின்னர் காணப்படுகின்ற திகதியாக, ஜனவரி 20ஆம் திகதி காணப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

அத்துடன், “எம்மால் முடிந்த அளவுக்கு தேர்தலை வெகுவிரைவில் நடத்த முயன்று வருகின்றோம். இருப்பினும், பிரதான கட்சிகளில் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய சந்தர்ப்பம் வழங்க வேண்டியுள்ளது. அதில் பெண்கள் பிரிதிநிதித்துவம் 25 சதவீதமாக நிச்சயம் அதிகரிக்கப்படும். அவ்வாறு பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு வாய்ப்பளிக்காத கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் நிராகரிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டார்.