கண்காட்சிக்காக ஆடுகளை கோரிய நபர் ஆடுகளுடன் மாயம்

0
469
வாழ்வாதாரத் தேவைக்காக வழக்கப்பட்ட 18 ஆடுகளை கண்காட்சியும் படப்பிடிப்பும் இருப்பதாகத்தெரிவித்து அதன் உரிமையாளர்களை ஏமாற்றி சம்பவம் ஒன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ முகாமில் கண்காட்சியும் படப்பிடிப்பும் இருப்பதாக தெரிவித்து குறித்த ஆடுகளை வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டதாக அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் பற்றித்தெரியவருவதாவது,
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மாற்று ஆற்றல் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று முன்தினம் (10) மாலை 6.00 மணியளவில் அவரது வீட்டிற்குச்சென்ற நபர் ஒருவர், இராணுவமுகாமில் கண்காட்சி ஒன்றும் படப்பிடிப்பு ஒன்றும் இருப்பதாகவும் அதற்கு இருபதாயிரம் ரூபா பணம் தருவதாகவும் தெரிவித்ததாகவும் அதன் பின்னர் தனது மகனை வாகனத்தில் ஏற்றிச்சென்று தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களிற்குச் சென்றதோடு, கிளிநொச்சி பரந்தன் பகுதயில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்கும் அழைத்துச்சென்று மதுபானம் வழங்கியதாகவும் அதன் பின்னர் வீட்டிற்குக்கூட்டி வந்து இறக்கி விட்டு சென்றதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து நேற்றுக் (11) காலை 6.30 மணிக்கு, குறித்த நபர் வாகனத்தில் வந்து ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து 18 ஆடுகளையும் ஏற்றிக்கொண்டு வீட்டின் உரிமையாளரான மாற்றுத்திறனாளியையும் அவரது பெறா மகனையும் வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார்.
ஏ9 வீதியூடாக கிளிநொச்சி நகரைச்சென்று அங்கு கடையொன்றில் உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் நிழற்படப்பிரதியொன்றை எடுத்து வருமாறு இறக்கி விட்டு, அங்கிருந்து ஆடுகளுடன் தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் நேற்றைய தினம் (11) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து விசாணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சி பொலிசார், வாகனம் நடமாடிய இடம் மற்றும் விருந்தினர் விடுதி ஆகியவற்றில் பொருத்தப்பட்ட சி.சி.ரி வி கமெராவின் ஒலிப்புதிவுகளையும் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் களவுக்குப்பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் இலக்கத்தகடு, மற்றும் அதன் உரிமையளார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபரின் புகைப்படம் ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியினுடைய வாழ்வாதாரத் தேவைக்கென வளர்க்கப்பட்ட பசு மாடுகள் இரண்டு களவாடப்பட்டு வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது,
thinakaran