கிழக்கு மாகாணசபை 20ஜ தள்ளிப்போட்டதன் மர்மம் என்ன? முன்னாள் காரைதீவு உபதவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி கேள்வி!

0
407
காரைதீவு நிருபர் சகா
 
மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமைக்கு சாவுமணியடிக்கும் 20வது திருத்தத்தை வட மாகாணசபை நிராகரித்திருந்தது. அது வரவேற்புக்குரியது. ஆனால் அதேபோல் நிராகரிக்கவேண்டிய கிழக்கு மாகாணசபை 11வரை தள்ளிப்போட்டதன் மர்மம் என்ன?
 
காரைதீவுப்பிரதேசசபையின் ( இலங்கை தமிழரசுக்கட்சி) முன்னாள்உப தவிசாளர் வீ.கிருஸ்ணமுர்த்தி இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
கிழக்குமாகாணசபையின் இன்றையநிலை தொடர்பாக அவர் மேலும் கருத்துரைக்கையில்:
 
தமிழ்மக்களின் பாரிய தியாகத்திலுருவான இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தமான மாகாணசபைகளின் அதிகாரங்களை தற்போதைய 20வது திருத்தம் பறித்தெடுக்கின்றது. எனவே 20வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதென்பது தமிழ்மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். 
 
அதுமட்டுமல்ல தமிழ்மக்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதுமாகும் என்று சொல்லப்படுகின்ற இக்காலகட்டத்தில் பெரும்பான்மையாக 11 த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களைக்கொண்ட கிழக்கு மாகாணசபை மிகவிரைவாக அதனை நிராகரித்திருக்கவேண்டும்.
 
ஆனால் தமது சுயலாபம் கருதி இதனை பின்தள்ளிப்போட்டமையானது அவர்களுக்கு வாக்களித்த மக்களது உணர்வுகளை சீண்டிப்பார்ப்பதாகவுள்ளது. தங்களது ஆசனமும் வருவாயும் வரப்பிரசாதமும் தொடரவேண்டும். ஆனால்  மக்களின் உணர்வுகள் அபிலாசைகள் புறக்கணிக்கப்படவேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடா என மக்கள் கேட்கின்றனர்.
 
ஒட்டுமொத்த தமிழ்மக்களது உணர்வுகளும் 20க்கு எதிராக இருக்கின்றபோது கிழக்கு தமிழ்ப்பிரதிநிதிகள் மட்டும் ஏன் இவ்வாறு தள்ளிப்போட்டதற்கு ஆதரவளித்தார்கள் என்பது புதிராகவுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் இன்று கொண்டுவந்துள்ள 20வது திருத்தம் மக்களின் ஜனநாயகவாக்குரிமையை பறித்தெடுக்கும் ஜனநாயகவிரோத செயற்பாடாகும். இதற்கு வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழுநாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்.
 
மாகாணசபை கொண்டுவரப்பட்டதன் பின்புலத்தை யாவருமறிவோம். குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு ஒரு தற்காலிக தீர்வாகப் பெறப்பட்ட மாகாணசபை மேலும் அதிகாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் அதனை தாரை வார்த்துக்கொடுப்பதற்கு வழிகோலும் சமிக்ஞையை கிழக்குமாகாணசபை முன்னெடுத்துள்ளதா? என்ற ஜயப்பாடு மக்கள்மத்தியில் தோன்றியுள்ளது.
 
கடந்த காலத்தில் பல்வேறு தியாகங்களைச்செய்த தமிழ்மக்கள் சமகாலத்தில்  வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்ட்டி ஆட்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில் இந்த 20வது திருத்தம் இருக்கின்ற அதிகாரத்தைப் பறித்தெடுக்கின்ற செயற்பாடாகும் என்பதை அனைவரும் அறிவர்.
13வது திருத்தத்தின் பிரகாரம் காணி பொலிஸ் அதிகாரங்கள் என மாகாணசபை அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தவேண்டும் என்போர் எப்படி இதற்கு ஆதரவளிக்கச்சொல்லி மக்களைக் கேட்பது? மக்களை தொடர்ந்தும் ஏமாற்றமுடியாது. 
 
எனவே அனைத்து மக்களும் இந்த 20வது திருத்தச்சட்டமூலத்திற்கெதிராக கிளர்ந்தெழவேண்டும். மக்களின் ஜனநாயக வாக்குரிமையை அடகுவைக்க நாம் முனையக்கூடாது. அது அவர்களது அடிப்படை உரிமை. 20க்கு ஆதரவாக வாக்களிப்போருக்கு துரோகி பட்டமளித்து சமுகத்திலிருந்து ஓரம்கட்டவேண்டும்.
 
மக்கள் வாக்களித்து பிரதிநிதிகளாக வந்தவர்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. அவர்கள் எப்போதும் மக்களின் உணர்வலைகளை பிரதிபலிக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு தனது சுய எண்ணப்படி தன்னிச்சையாக கருத்துக்களை வெளியிட்டு தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளக்கூடாது.
 
உண்மையில் இச்சட்டமூலம் முதலில் மாகாணசபைகளில் வாக்கெடுப்பிற்கு விட்டு அதன் சாதகபாதக முடிவை வைத்தே பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக நடந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்தே இதன் சூழ்ச்சித்தன்மை விளங்குகின்றது.
 
எனவே இந்த 20வது திருத்தம் ஒட்டுமொத்த மக்களதும் ஜனநாயக வாக்குரிமைக்கு வேட்டுவைக்கின்ற சதியாகும். எதிர்வரும் 11இல் கிழக்கு மாகாணசபை 20க்கு ஆதரவளித்து ஒரு வரலாற்றுத்தவறை விட்டால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பர் என்பது மட்டும் உறுதி. என்றார்.