கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன

0
1345

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களது நிருவாகக்கட்டட முற்றுகைப் போராட்டம் நேற்றைய தினம் முதல் கைவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேரவையினருக்கும் மாணவர்களுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமான நிருவாகக்கட்டட முற்றுகையானது சரியாக ஒரு மாதத்தில் நிறைவு பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தினை மீளவும் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக 10ஆம் திகதி பகல் 12 மணிக்குள் போராட்டத்திலீடுபட்டுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுதல், முன்னுரிமை அடிப்படையில் முதல், இறுதி, 3ஆம், மற்றும் 2ஆம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்குதல், ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்படுத்தப்பட்ட மாணவர்களது பிரச்சினைகளை ஆராயவென குழு ஒன்று நியமனம் ஆகிய உடன்பாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உபவேந்தர், பேரவை உறுப்பினர்கள், மாவர் ஒன்றியச் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவர்களது மாகாபொல மற்றும் பேசறி கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்துதல், கடந்த ஒரு மாதமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் இல்லை, எதிர்வரும் 18ஆம் திகதி இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல், ஏனையவர்களுக்கு ஒக்ரோபர் 2ஆம் திகதிக்குள் ஆரம்பித்தல், எதிர்காலத்தில் பல்கலைக்கழக நடைமுறைகள் குறித்து ஏற்படும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்த்தல், பல்கலைக்கழகம் மூடப்பட்ட நாட்களில் நடைபெறவிருந்த பரீட்சைகளை விசேடமாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்படுத்தப்பட்ட மாணவர்களது பிரச்சினைகளை ஆராயவென கலாநிதி எச்.ஆர்.தம்போபிற்றவைத் தலைவராகக் கொண்டு ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.மௌனகுரு மற்றும் அருட்தந்தை போல் றொபின்சன் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் 18ஆம் திகதி இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படுவதுடன், ஏனையவர்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் ஒக்ரோபர் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் மாணவர்கள் தங்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள், கட்டவுட்டுக்கள் கொடிகளை அகற்றி வெளியேறி வருகின்றனர்.