சிவசந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் வெளியீடு

0
1197

கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிவ சந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (09) வெளியிடப்படவுள்ளது.
மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சிவ சந்திரகாந்தனின் சிறைக்குறிப்புகள் நூல் பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டதன் பின்னரான குறிப்புகளை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டில் கட்சியின் முக்கியஸ்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் (25.12.2005) மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று மாகாண சபை உறுபபினரான சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் பல தடவைகள் பிணை மனு முன்வைக்கப்பட்டபோதும் இதுவரை பிணை வழங்கப்படவில்லை என்பதுடன், தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான தொடர் விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போது மாகாண சபை அமர்வுகளில் பங்குபற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.