சிறு விடயங்களுக்கு பிரிந்து நிற்பது பங்காளி கட்சிகளுக்கு செய்யும் துரோகமல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமே.

(படுவான் பாலகன்) சிறு சிறு விடயங்களுக்கு பிரிந்து நிற்பது தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளுக்கு செய்யும் துரோகமாக அமையாது. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
1987, 1991ம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியினை  புனரமைப்பு செய்து, திறக்கும் நிகழ்வு நேற்று(21) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போதே, இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
தூபி சிதைக்கப்பட்டு 10வருடங்கள் துப்பரவின்றி காணப்பட்ட நிலையிலேயே மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் புனரமைப்பு செய்திருக்கின்றார். இதேபோல பாராமுகமாக, கவனப்பாரற்று இருக்கின்ற விடயங்களை சீர்செய்ய ஆரம்பிக்கின்ற போது, வரவேற்பு கொடுக்காமால் வீண் விமர்சனம் செய்கின்ற பண்பு பலரிடையே இருக்கின்றது. ஆரோக்கியமான விமனங்களை ஏற்றுக்கொள்ள முடியும் வியாக்கியானம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான விடயங்களை அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டிய தேவையும் இல்லை. அவ்வாறு பார்பதினாலையே வியாக்கியானம் செய்கின்றனர். வரலாறுகளை எமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கவேண்டிய தேவையிருக்கின்றது. அவ்வாறு கொடுப்பதனை நேர்த்தியாக கொடுக்கவேண்டியதும் நமது கடமையாகும்.
தீர்வை பெறுவதற்காக முயற்சித்திக்கொண்டிருக்கின்றோம். இவ்வாறானதொரு தருணத்தில்தான் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரை வீழ்த்த வேண்டும், புறக்கணிக்க வேண்டும், எமக்கு கீழே இருக்க வேண்டும் என்ற கீழ்தரமான சிந்தனைகள் மனதில்; தோன்றவேகூடாது. அவ்வாறு தோன்றினால் நாம் நினைப்பதனை அடையமுடியாது. கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தினை அடுத்த தேர்தலிலும் நிலைநிறுத்தவேண்டுமென நினைக்கின்ற நாம், இவ்வாறு சிறுசிறு விடயங்களுக்கு பிரிந்து நின்று, தான்தோன்றித்தனமாக செயற்படுவது ஒட்டுமொத்த மக்களுக்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும். பங்காளி கட்சிகளுக்கு செய்யும் துரோகமாக அன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே இவ்வாறான செயற்பாடுகள் அமையும். பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன. அவ் உயிர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். என்றார்.