புலிபிடித்தசேனையில் நேற்றிரவு மீண்டும் வனஇலாகாவால் 16 எல்லைக்கற்கள் :

பொத்துவில் புலிபிடித்தசேனையில் மீண்டும் நேற்று வெள்ளியிரவு(18)   16 எல்லைக்கற்களை வனஇலாகாவினர் நட்டுள்ளதாக பொத்துவில் புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பின்  செயலாளர்  ஜே.எம்.சுல்தான்(ஆசிரியர்) தெரிவித்தார்..

 
பொத்துவில் மதுரம்வெளியிலுள்ள புலிபிடித்தசேனை எனும் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650ஏக்கர் குடியிருப்புக்காணியை வனபரிபாலன இலாகாவினர் ஆக்கிரமித்துவருவதாகக்கூறி  எதிர்ப்புத் தெரிவித்து கடந்த (15)செவ்வாய்க்;கிழமை அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஈடுபட்டிருந்தமை தெரிந்ததே.
 
ஆர்ப்பாட்டம் இடம்பெற்று மறுநாளிரவு(16) அங்கு 18 எல்லைக்கற்கள் நடப்பட்டிருந்தது. மீண்டும் நேற்று(18) இரண்டாவது தடவையாக  மேலும்  அங்கு 16 எல்லைக்கற்கள் நடப்படுள்ளன. இது அங்கு நிலைமையை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 
 
 
இதுதொடர்பில் புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பின் செயலாளர் ஜே.எம்.சுல்தான் தெரிவிக்கையில்:
 
1956 முதல் இப்பிரதேசத்தில் நாம் வாழ்ந்து வந்தோம். அங்கு 650 ஏக்கரில் 250 குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தோம்.1990 வன்செயலின்போது நாம் இடம்பெயரவேண்டிநேரிட்டது. அதனால் எமது பிரதேசம் பற்றைக்காடாக மாறியது.
இந்நிலையில் 2007 இல் வனபரிபாலன இலாகாவினர் எமது பகுதிக்கு வந்து பெர்மிட் காணிகளில் கட்டைபோட்டு ஆக்கிரமிக்கத்தலைப்பட்டனர்.
 
நாம் பொத்துவில் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தோம். 07வருடங்களாக வழக்குப்பேசப்பட்டது. 2015இல் இக்காணி மக்களுக்குரிய காணி என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்பிறகு சுமார் 50பேர் அங்கு சென்று தற்காலிகமாக குடியேறினர். இந்நிலையில்  கடந்த ஒருவாரகாலமாக இரவோடிரவாக மீண்டும் மீண்டும் வனபரிபாலன இலாகாவினர் வந்து எல்லைக்கட்டைகளைப்போடத்தொடங்கியுள்ளனர்.
 
நாம் பிரதேசசெயலாளரிடம் சென்று முறையிட்டாம். எதுவித பலனுமில்லை. அதனால் அன்று அவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். நாம் ஏழைகள் .இன்றைய நல்லாட்சியில் எமக்கு நீதிகிடைக்கவேண்டும்.
 
கடந்த (16) புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் புலிபிடித்தசேனை பொதுமக்களுக்கும் வன இலாகாவின் மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினருக்குமிடையே பிரதேசசெயலர் முஸர்ரப் முன்னிலையில் இடம்பெற்ற சந்திப்பில் இரவு வேளைகளில் எல்லைக்கட்டைகள் இடுவதில்லையெனவும் குழுவொன்றை நியமித்து தீர்வெடுப்பதாகவும் இணக்கம் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த புதனன்றிரவு  (16) இரவு 8.30 மணியளவில் ஆயுதம் சகிதம் வந்த வன இலாகாவினர் 18 கட்டைகளை எமது காணிகளில் நட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக மறுநாள் (17) வியாழக்கிழமை காலை பொத்துவில் பிரதேசசெயலகத்திற்குச்சென்று முறையிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். நாம் மீண்டும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடாத்த வேண்டுமா? என்று கேட்கின்றோம். எம்மைக்கவனிக்க எமது காணியை காப்பாற்ற யாரும் இல்லையா? நாம் வாக்களித்தவர்கள் எங்கே? என அவர் வினாவெழுப்பியிருந்தார்.
 
இதேவேளை நேற்று(18) மீண்டும் இரவில் இரண்டவாது தடவையாக  16 எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன.
இது மீண்டும் மீண்டும் எம்மை சீண்டுவதாக உள்ளது. எமது பெர்மிட் காணிகளில் எல்லைக்கற்களை இவர்கள் எதற்காக நடுகிறார்கள் நாம் பிரதேச செயலர் தொடக்கம் முதலமைச்சர் வரை தெரியப்படுத்தியுள்ளோம். இதுவரை எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு போராட்டத்திற்கு எம்மைத் தூண்டியுள்ளனர்.
நாம் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் அமைச்சர்கள் உடனடியாக எமது விடயத்தில் தலையிட்டு எமது பூர்விக காணியைக் காப்பாற்றித்தரவேண்டும். என்றார்.
 
பிரதேச செயலாளர் முஸர்ரப் விளக்கம்!
இது தொடர்பாக பொத்துவில் பிரதேச செயலாளர் முஸர்ரப்பிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த புலிபிடித்தசேனைப்பிரதேசத்தில் மக்களின் காணிகளில் வன இலாகாவினர் எல்லைக்கட்டைகளை இடுவதாகக்கூறி அந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
நான் தலையிட்டு மறுநாள் எனது அலுவலகத்தில் மக்களுக்கும் வன இலாகாவினருக்குமிடையே சந்திப்பை ஏற்படுத்தி இரவுவேளைகளில் கட்டை போடுவதில்லையென இணக்கம் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த(17) வியாழக்கிழமை அம்மக்கள் மீண்டும் வந்து வனஇலாகாவினர் கட்டை போட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர். நாங்கள் அரச அதிகாரிகள் . நீங்கள் வனஇலாகாவினருடன் பேசிப்பாருங்கள். என்றார்.
 
அங்கு பிரச்சினை வளர்ந்த கொண்டு செல்கின்றது என்பது மட்டும் உண்மை.