இளம் கண்டு பிடிப்பாளரை பாராட்டிய கல்குடா ஊடகவியலாளர்கள்

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ் கானை கல்குடா ஊடகவியலாளர்களின் ஒன்றியத்தினர் திங்கட்கிழமை மாலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்..

இதன்போது கல்குடா ஊடகவியலாளர்களின் ஒன்றியத்தின் உப தலைவர் எஸ்.எம்.எம்.முர்ஷித், செயலாளர் ந.குகதர்சன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பாகவும் அறிந்து கொண்டனர்.

இவ் இளம் கண்டு பிடிப்பாளர் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரமொன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.

குறித்த இயந்திரம் மூலம் மேற்கூறிய செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதோடு, தன்னியக்க கருவியூடாக வயல் வரப்புகளிலிருந்து கொண்டே சிரமமின்றியும் இயக்கும் திறனைக் கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற இருபத்தியொரு மாணவர்களுள் முதல் கட்டமாக கொரியா செல்லும் பன்னிரண்டு மாணவர்களுள் எம்.எம்.யூனூஸ் கான்; தென் கொரியாவில் ஒரு வாரம் நடைபெறவுள்ள சர்வதேச கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்று செவ்வாய்க்கிழமை தென் கொரியா நாட்டுக்கு பயணமாகவுள்ளார்.

இந்த சர்வதேசக் கண்காட்சியில் பங்கு பற்றி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கல்குடா பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இளவயதில் இச்சாதனையினை நிலை நாட்டிய குறித்த மாணவனுக்கு கல்குடா ஊடகவியலாளர்களின் ஒன்றியத்தினர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.;.