ஆவணத்தில் ஒப்புதல் வழங்கினாலும் நடைமுறைக்கு இடமளிக்கப்படாது

0
469

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு கடதாசியில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது. இதற்கு எதிராக சகலரையும் ஒன்றிணைத்துப் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும், சபையை அவசர அவசரமாக ஒத்திவைத்து விவாதிப்பதற்கு காணப்பட்ட சந்தர்ப்பத்தையும் அரசு இல்லாமல் செய்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்கள் சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் நாளை (இன்று) கைச்சாத்திடப்படவிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். ஒப்பந்தம் கடதாசியில் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்த வரைபு பெயரளவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், சபையின் கருத்துக்களை ஒப்பந்தத்தில் உள்வாங்கும் நோக்கம் எதுவும் அரசுக்கு இருக்கவில்லை.