கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு 2000பேர் பயணித்தனர்ஆக.2இல் மீண்டும் மூடப்படும்!

காரைதீவு சகா

 
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன்  ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்திற்கு குமண கானகத்தினூடாகச் செல்கின்ற பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நேற்று  15ஆம் திகதி சனிக்கிழமை  காலை திறக்கப்பட்டது..

 
உகந்தமலைமுருகனாலயத்தில் அதிகாலை 5 மணியளவில் விசேடபூசை பிரதமகுருக்கள் சிவஸ்ரீ சீதாராம் குருக்களினால் நடாத்தப்பட்டது. அந்தப் பூஜையில் அம்பாறை  மற்றும் மொனராகலை மாவட்ட மேலதிக அராசங்க அதிபர்கள லாகுகலை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
 பிரதமகுரு சீதாராம் குருக்கள் விசேட ஆசியுரை நிகழ்த்தினார். காட்டுப்பயணத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைவிதிகள் பற்றியும் எடுத்தியம்பினார்.
உகந்தமலை முருகனாலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க நிகழ்வை நெறிப்படுத்தினார்.
 
 பூஜை முடிந்ததும் காலை 7மணியளவில் காட்டுப்பாதை திறக்கப்பட்டது..அங்கு சிறு வைபவம் மொனராகலை மேலதிக அரசாங்கஅதிபர் முன்னிலையில் நடாத்தப்பட்டது. வேல்சாமி தலைமையிலான குழுவினரும் ஏனைய பாதயாத்திரீகர்களுமாக சுமார் 2000பேர் முதல்நாள் பயணத்தில் ஈடுபட்டனர்.
 
நேற்று திறக்கப்பட்ட காட்டுப்பாதை  ஆகஸட்  மாதம் 02ஆம் திகதி மூடப்படும்.
உகந்தமலை முருகனாலயத்திலிருந்து ஆரம்பமாகும் இக்காட்டுப்பாதை  குமண யால வனங்களினுடாக செல்லும். இடைநடுவில் 5 அல்லது 6நாட்கள் காட்டினுள் பாதயாத்திரீகர்கள் தங்குவர்.
அவர்களுக்கான பாதுகாப்பை வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் பொலிசாரும் வழங்குவர்.
 
இம்முறை குமணக்காட்டுப்பகுதிக்குள் பிளாஸ்ரிக் தண்ணீர்ப்போத்தல்கள் விநியோகித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோல் இம்முறை அங்கு அன்னதானமும் தடைசெய்யப்பட்டுள்ளது.
 
காட்டுப்பகுதிக்குள் தண்ணீர் விநியோகத்திற்கு நீர்வழங்கல் அதிகாரசபையும் லாகுகலை பாணமை திருக்கோவில் பிரதேசசபைகளும் கச்சேரியும் பொறுப்பாகவிருக்கும்.
கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.