புலிகளின் சட்டக் கல்லூரிக்கு வரவில்லை

தமிழீழ விடுதலை புலிகளால், கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கு நான் வந்திருக்கவில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில், புலிகளால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ சட்டக் கல்லூரிக்கு, விக்னேஸ்வரன் சென்றதாக,  இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் சில புகைப்படங்கள், செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட சட்ட கல்லூரிக்கு, என்னை, எவரும் அழைக்கவில்லை. நான் வரவும் இல்லை. நான் வந்ததாகப் புகைப்படங்கள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். அவ்வாறான புகைப்படங்கள் இருந்தால் காட்டுங்கள். நான் அதனைக் காண விரும்புகின்றேன்” என சிரித்தபடி விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.