ஒரு கிழமைக்குள் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் பிரதேச சபைக்குள் குப்பைகள் கொட்டப்படும்

(படுவான் பாலகன்)  மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் தொடர்ச்சியாக பிரதேசத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இப்பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் பிரதேச சபையினர் தீர்க்க வேண்டும். தீர்க்காத பட்சத்தில் பிரதேசத்தில் உள்ள குப்பைகளை பிரதேசசபைக்குள் கொட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சேரிக்கப்படும், குப்பைகள் அனைத்தும் விடுதிக்கல் கிராமத்தில் கொட்டப்பட்டன. அக் குப்பை மேட்டில் தீயேற்பட்டதை தொடர்ந்து, அவ்விடத்தில் குப்பைகளை கொட்டவேண்டாம் எனக்கூறி அங்குள்ள மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதேச கழிவுகள் அகற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் குறிப்பிடுகையில், விடுதிக்கல் குப்பைமேட்டில் தீயேற்பட்ட போது, அவ்விடத்திற்கு சமூகம் கொடுத்திருந்தேன். அதன் போது ஆரையம்பதி பிரதேசசபை செயலாளரிடம் உரையாடிய போது, உக்கக்கூடிய கழிவுகளை தமக்கு வழங்குமாறு கூறியிருந்தார். புதிய இடமொன்று குப்பை கொட்டுவதற்கென தீர்மானிக்கும் வரை அவற்றினை அங்கு வழங்குமாறு மண்முனை தென்மேற்கு பிரதேசசபை செயலாளரிடம் கூறியிருந்தேன். ஆனால் அச் செயற்பாட்டினை பிரதேசசபை செயற்படுத்தவில்லை. அல்லது அதில் உள்ள சிக்கல்கள் குறித்தோ எமக்கு அறிவிக்கவுமில்லை. அண்மையிலும் கூட மகிழடித்தீவு வைத்தியசாலையின் கழிவுகள் அகற்றப்படவில்லையென அங்குள்ள நோயாளர்கள் குறிப்பிட்டனர். உடனடியாக அங்குள்ள குப்பைகளை அகற்றுமாறு பிரதேசசபை செயலாளருக்கு அறிவித்தேன். செய்வதாக ஒப்புக்கொண்டும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் பிரதேசத்தில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. இவற்றினை பிரதேசசபை உடனடியாக தீர்க்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் பிரதேச சபையினர் தமக்கான இடத்தினைப் பெற்று குப்பைகளை அகற்றாதவிடத்து, பிரதேசத்தில் உள்ள கழிவுகள் அனைத்தையும் பிரதேசசபைக்குள் கொட்ட வேண்டிய நிலையேற்படும்.

மக்களுக்கு சேவை செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், தங்களால் சேவை செய்ய முடியாதெனின் அந்த இடத்திலிருந்து இடமாற்றம் பெற்று செல்லலாம். என்றார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பல இடங்கள் உள்ளபோதிலும், குப்பை கொட்டுவதற்கு இடமில்லையெனக் கூறுவது பொருத்தமற்றது. என மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

குப்பை கொட்டுவதற்கான இடத்தினை புதன்கிழமை, பிரதேசசபை செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதாரசேவை அதிகாரி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு, தெரிவு செய்யும் இடத்தில் உடனடியாக குப்பைகள் கொட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.