யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும்.வீ.ஆனந்தசங்கரி.

பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை கூறியிருந்தேன் என இலங்கை அரசியலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்ன? என்ற இன்று ஆனந்தசங்கரி அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை அரசியலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்ன?
பிரித்தானிய தொழிற்கட்சி அரசாங்கம் இலங்கையில் தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக அறிவித்தல் விடுக்கும் வரை இலங்கையில் கட்சி அரசியல் கேள்விப்படாத ஒன்றாகும். 1948 பெப்ரவரி 04ம் திகதி பிரித்தானிய ஆட்சியியாளரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. பிரித்தானிய அரசாங்கத்தால் அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்காக கௌரவ.ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியூ.சி, கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி ஆகியோரால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இவ்விருவரும் வெற்றியீட்டினர். இவ் இருவருக்கிடையே ஏற்பட்ட அபிப்பிராய பேதம் காரணமாக கட்சி பிளவுபட்டு கௌரவ.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் தலைமையில் 1949ம் ஆண்டு தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 22 ஆண்டுகளின் பின் 1970ம் ஆண்டுவரை இவ்விரு கட்சிகளும் தனித்தனியாகவே இயங்கின.
1970ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்கு புதிய குடியரசு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். தமிழ் மக்கள் எதிர்நோக்கக்கூடிய கஸ்டங்களை முன்கூட்டியே அறிந்த கௌரவ.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் இந்த புதிய அரசியல் சாசனத்தை எதிர்ப்பதற்கு ஒத்துழைப்பு தரும்படி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்த இரு தலைவர்களும் தங்களுக்கிடையே 22 ஆண்டுகளாக காணப்பட்ட வேற்றுமைகளை மறந்து 1972ம் ஆண்டு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி, அது 1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றம் பெற்றது. தமிழ் பிரதேசங்களில் இயங்கும் மிகப்பெரும் தமிழ் அரசியல் கட்சிகள் என்பதால், இவ்விரு கட்சிகளின் இணைப்பு,  ஏகபிரதிநிதித்துவத்தின் தன்மையை இக்கட்சிக்கு வழங்கியது போல் தோன்றியது. ஆனால் அது அப்படியல்ல. ஏனென்றால் வேறுபல சிறிய கட்சிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்ததுடன், இடதுசாரி கட்சிகளும் குறிப்பிடத்தக்களவு வலுவிழந்தன. எது எப்படியிருப்பினும் உலகளாவிய அளவில் குடியேறியுள்ள இலங்கை தமிழ் மக்கள் இந்த ஒற்றுமையை மிகவும் பாராட்டி இணைப்பை, இரு பெரும் தமிழ் அரசியல் ராட்சகர்கள் மீள கைகோர்த்தமையை பல விதத்திலும் பிரமாதமாக கொண்டாடினார்கள். இவ்விரு தலைவர்களும் ஏற்கனவே நடந்தது போல மீண்டும் பிளவுபடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டுமென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியை தமது சொத்தாக தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றனர். இந்த இணைப்பை மேலும் பலப்படுத்தவும், மலைநாட்டு தமிழ் மக்களையும் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தோடு, தான் வகித்த தலைவர் பதவியை, தந்தை செல்வநாயகம் அவர்கள் 1976ம் ஆண்டு நடந்த கட்சியின் மாநாட்டில் தானாக முன்வந்து, கௌரவ. ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ எஸ்.தொண்டமான் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டார்.

1977ம் ஆண்டு தலைவர்கள், தந்தை செல்வா, ஜீ.ஜீ. ஆகியோரின் மறைவுக்குப்பின் 1977ம் ஆண்டு நடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலே தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட முதலாவது பொதுத்தேர்தலாகும். அத்தேர்தல் நியமனக்குழுவில் ஓர் அங்கத்தவராக கௌரவ.எஸ்.தொண்டமான் அவர்களும் இடம்பெற்றிருந்தார். தேர்தல் முடிவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி ஒற்றுமையை தமிழ் மக்கள் மிகப்பாரதூரமாக எடுத்துக்கொண்டார்கள் என்பது தெளிவாகியது. மிக அதிகப்படியான வாக்குகளால் சகலரும் வெற்றிபெற்று ஒரேயொரு வேட்பாளர் மட்டும் 500 வாக்குகளால் தோல்வியடைந்தார். ஆனால் அத்தேர்தலில் வெற்றியீட்டிய கௌரவ.கே.டபள்யூ.தேவநாயகம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த காலம் தொடக்கம் பல வகையிலும் ஒத்துழைப்பு நல்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி ஈட்டிய வெற்றி ஒவ்வொருவரையும் தமக்கிடையே நிலவிவந்த பேதங்களை மறந்து மீண்டும் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் பழகினார்கள் என்பதை நிரூபிப்பதற்கு, எவரையும் சவால் விட்டு அழைக்க வேண்டிய அவசியமில்லையென கருதுகிறேன். ஆயுதம் தாங்கிய குழுக்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கியவரை இந்த ஒற்றுமை நீடித்தது. ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் எமது கட்சிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது. இதுவரை ஜனநாயக கோட்பாட்டில் மிகப்பெருமையுடன் செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சோதனை காலம் ஏற்பட்டது. கட்சியின் ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளுக்கு தடைகள் ஏற்பட்டன. அத்துடன் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ.அ.அமிர்தலிங்கம், கௌரவ வி.யோகேஸ்வரன் ஆகியோர்களின் படுகொலை துன்பமான திருப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற படுகொலைகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது. அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையையடுத்து பாராளுமன்ற தேசியபட்டியலில் அவருடைய வெற்றிடம் நிரப்பப்பட்டதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓர் இருண்ட காலத்தினுள் நுழையவேண்டி ஏற்பட்டது. கட்சியை பாதுகாப்பதற்காக பலர் மேற்கொண்ட தியாகங்கள், நடவடிக்கைகள் ஓரிரு பேராசை பிடித்த முக்கியஸ்தர்களால் கட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. என்னால் கடைபிடிக்கப்பட்ட இராஜதந்திரமே கட்சியை காப்பாற்றி வைத்திருந்தது. ஆனால் இறுதியில் நன்றிகெட்ட தன்மை, துரோகியின் ஆயுதத்திலும் பார்க்க வலுகூடியது என்ற தத்துவம் நிரூபிக்கப்பட்டது.

எனது இராஜதந்திர அணுகுமுறையை உணராத திரு.மாவை சேனாதிராஜா அவர்கள், அப்பதவிக்கு தனது பெயர் பிரேரிக்கப்பட்டதும் தானே அப்பதவிக்கு பொருத்தமானவர் என எண்ணிக்கொண்டார். ஆனால் உண்மையில் அவர் இறுதிவரைக்கும் சம்பளம் பெற்றுக்கொண்டு கடமையாற்றியவர் என்பதாலும், கலாநிதி நீலன் திருச்செல்வம், திரு.இரா.சம்பந்தன் போன்றவர்கள் இப்பதவியில் அக்கறை கொண்டிருந்தமையாலும் அவர் இப்பதவிக்கு பொருத்தமற்றவர் என்பது தெளிவாகிறது. நான்கூட ஒரு கிராமசபை உறுப்பினராககூட இருக்கவில்லை. இந்த நியமனத்திற்கு முக்கிய காரணம் யாதெனில் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் அகால மரணமடைந்ததன் பின் பாராளுமன்ற பதவியையும், செயலாளர் நாயகம் பதவியையும் தனக்கு பெற்றுத்தரும்படி திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களை எழுத்து மூலம் கேட்டதோடு, இப்பதவிக்கு தன்பெயர் பரீசிலிக்கப்படாத பட்சத்தில் கட்சியை விட்டு விலகவும் தயாரானார். நான் இவரை இப்பதவியில் நியமிக்க, பிரேரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. கலாநிதி நீலன் திருச்செல்வம் ஊடாக தேர்தல் ஆணையாளரிடம் இவருடைய நியமனம் பற்றி தெரிவித்தபோது கட்சியின் ஆவணங்களில் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் பெயரே செயலாளர் நாயகமென குறிப்பிடப்பட்டிருப்பதால் இவரை நியமிக்க முடியாதென தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். அதன் பின் திரு.ஆர்.சம்பந்தன், திரு.மாவை சேனாதிராஜா, நான் ஆகிய மூவரும் நாங்கள் நடவடிக்கை குழு உறுப்பினர்கள் எனவும், கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களை புதிய செயலாளராக நியமிக்கப்படும் வரை ஏற்றுக்கொள்ளுமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இவர் நியமிக்கப்பட்டார்.
1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அம்பாறை தொகுதியில் போட்டியிடுவதற்கு திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். அத்தேர்தலில் தோல்வியடைந்ததும் திரு.சேனாதிராஜா அவர்களும் திருகோணமலை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு.ஆர்.சம்பந்தன் அவர்களும் ஏற்கனவே நியமன உறுப்பினராக சிபாரிசு செய்யப்பட்டிருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களின் பெயரை நீக்கி தம்மை அவ்விடத்துக்கு நியமிக்குமாறு தனித்தனியே கேட்டிருந்தனர். இக்கட்டத்தில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு.அ.தங்கதுரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும்,அவ்விடத்துக்கு தானாகவே திரு.ஆர்.சம்பந்தன் நியமனம் பெற்றார். திரு.சேனாதிராஜா அவர்களுடைய முக்கிய குறைபாடு தனக்கு பாராளுமன்ற ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்பதே. அதனைத் தொடர்ந்து பல தடவைகள் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களிடம் வாய் மூலமாக பலதடவையும், இருதடவை கடிதம் மூலமும் அதில் ஒன்று ஐந்து பக்கங்கள் கொண்டதாகவும் காணப்பட்டது. அவரது பதவியை துறந்து அவ்விடத்துக்கு திரு.சேனாதிராஜா அவர்களை நியமிக்குமாறும், நான் ஜேர்மெனிக்கு செல்லவிருப்பதால் நான் திரும்பும்வரை காத்திராமல் அவரை நியமிக்குமாறு கலாநிதி நீலனை கேட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக கலாநிதி நீலன் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து உடனடியாக நாடு திரும்பி அவருடைய ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டேன். இரு நாட்கள் கழிந்தபின்பு திரு.சம்பந்தன் அவர்களுடைய இல்லத்தில் திருவாளர்கள். சம்பந்தன், செல்வராஜா, துரைராஜசிங்கம், ஜோசப் பரராஜசிங்கம், சேனாதிராஜா ஆகியோர்களுடன் நானும் கலந்துகொண்டு திரு.சேனாதிராஜா அவர்களையே பாராளுமன்ற வெற்றிடத்துக்கு நியமிக்குமாறு கேட்டிருந்தேன்.

அதன்பிரகாரம் சேனாதிராஜாவின் நியமனத்தைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் பலர் திரு.சேனாதிராஜா அவர்களை இரண்டாவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ததை மிக வன்மையாக கண்டித்தனர்.
2001ம்ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு நியமனம் கோரப்பட்டபோது அதே குழுவினர் திரு.சம்பந்தன் அவர்ளுடைய இல்லத்தில் சந்தித்தோம். அக்கூட்டத்தில் திரு.சேனாதிராஜா,  அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடடிய வகையில் யாழ் மாவட்டத்தில் தானே முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதனை பார்த்து ஆச்சரியப்பட்ட நான் என்ன கேலி செய்கின்றீர்களா எனக்கேட்டபோது, அவர் தான் அமர்ந்திருந்த ஆசனத்தை விட்டு கோபமாக எழுந்தவர் ஏதோ நினைத்துவிட்டு மீண்டும் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார். அவரின் கோரிக்கையை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்ததும் நல்ல வேட்பாளர்கள் சிவமகாராசா, சந்திரதாசா ஆகிய இருவரையும் இணைத்துக்கொண்டு தங்கள் மூவருக்கும் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதோடு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நான் மௌனம் சாதித்தேன். எனக்கு 36,000 வாக்குகளும், திரு.சேனாதிராஜாவுக்கு 33,000 வாக்குகளும் பெறப்பட்டன. அந்த நேரத்திலிருந்து அவருடைய நடவடிக்கைகள், நடத்தைகள் கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. அவர் என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட பல விதத்திலும் இரகசியமாக செயற்பட்டார். பிரபாகரனுக்கு இருநூறு வருடங்கள் தண்டனை விதித்தபோது நான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகை சுற்றிவரும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை கூறியிருந்தேன். பல சந்தர்ப்பங்களில் அவரை ஆதரித்தே பேசி வந்துள்ளேன். ஒருநாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் கௌரவ அனுருத்த ரத்வத்தையை பார்த்து பத்து ஆண்டுகள் போராடினாலும் உங்களால் பளை பிரதேசத்தை மீள கைப்பற்றமுடியதென்றும், ஆனையிறவு முகாமை கைப்பற்றுவது பகற் கனவு என்றும் கூறியிருந்தேன். ஆனால் வேடிக்கை என்னவெனில் திரு. ஆர்.சம்பந்தன் அவர்களும், திரு.சேனாதிராஜாவும் இணைந்து, நான் ஆனையிறவை இராணுவத்தினரிடம் திரும்ப கையளிக்க வேண்டுமென கூறியதாக காரணம் காட்டி என்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அலைந்து திரிந்தனர். இந்தக் கட்டத்தில் அவர்களுக்கு ஓர் சவால்விட விரும்புகின்றேன். நான் அவ்வாறு கூறினேன் என திருகோணமலை காளிக்கோயிலில் சத்தியம் செய்வார்களாக இருந்தால் அந்த நிமிடத்திலிருந்து இறுதிவரை அவருக்கு அடிமையாக சேவகம் செய்ய தயாராக இருக்கின்றேன் என்பதாகும். திரு.சேனாதிராஜா அவர்களுடைய பெரிய சதி யாதெனில் தந்தை செல்வா அவர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டு அவர் இறந்து 28 ஆண்டுகளின் பின் அவருடைய கட்சியை எவருடைய அனுமதியும் இன்ற,p சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய திரு.தங்கனின் கட்டளைக்கமைய கட்சியை புனரமைப்பு செய்ய முயற்சித்தார்.
எதற்கும் ஓர் எல்லை உண்டு.  தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்கின்ற சட்ட உரிமை தனக்கு இல்லையென்பதை திரு.சேனாதிராஜா ஒத்துக்கொள்ள வேண்டும். அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு தமிழரசு கட்சியை மீள புனரமைப்பு செய்தமை, திரு.சேனாதிராஜா அவர்களின் இந்த சிந்தனையற்ற செயலால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள், விடுதலைப்புலிகள் போராளிகள், யுத்தமுனையில் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆகியோர்களின் மரணத்துக்கு முழு பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும். திருவாளர்கள். சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோர் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே கொள்கையின் அடிப்படையில் பொதுச்சின்னமான ‘உதய சூரியன்’ சின்னத்தில் 2004ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை இவ்விருவரும்  அறிந்திருந்தனர். தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருந்தால் 2004ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். அன்றேல் யுத்தம் தற்காலிகமாகவேனும் நிறுத்தப்பட்டிருந்திருக்கும். இதன் அர்த்தம் யாதெனில் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில்; பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். மரணம் எதுவும் ஏற்பட்டிருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஒரு இழப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டிருக்கும். திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தான் இறக்கும் வரைக்கும் தமிழரசு கட்சியின் பதிவையோ, அல்லது அதன் சின்னத்iயோ  வேறு எவரும் பாவிக்கக்கூடாது என்பதற்காக அதனை பதிந்து வைத்திருந்தார். திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் இதனை உறுதிப்படுத்தி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
“விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசு கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே எனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவைப் பாதுகாத்து வைத்தார். தமிழரசு கட்சியை அவர் ஒருபோதும் புனரமைக்க எண்ணவில்லை.
அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசுக் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யவும், அதனைப் புனரமைக்க முயல்வது கவலைக்குரியது. இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையே இவர்கள் முறியடித்திருக்கிறார்கள்”.
நான் மிக அழுத்தம் திருத்தமாக கூறுவது யாதெனில் தந்தை செல்வநாயம் அவர்களோ ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களோ தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்களோ இவர்கள் எவரும் தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்ய கனவில் கூட விரும்பியிருக்க மாட்டார்கள்.
வீ.ஆனந்தசங்கரி                                                            செயலாளர் நாயகம் – தமிழர் விடுதலைக் கூட்டணி