கொக்கட்டிச்சோலை, மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணி – அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியின் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தினை துப்பரவு செய்யும் பணி இன்று(05) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உயிர்நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடரேற்றி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பின் படுவான்கரைப்பகுதியில் 2006ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து பின்னர் இராணுவத்தினர் கைப்பற்றினர். இதனால் அங்கிருந்த துயிலும் இல்லம் தகர்க்கப்பட்டிருந்ததுடன், அதை அண்டிய பகுதியில் இராணுவத்தின் முகாமும் அமைக்கப்பட்டிருந்ததாக அப்பிரதேசத்து மக்கள் கூறுகின்றனர். சிறிது காலத்தின் பின் இராணுவமுகாம் அகற்றப்பட்டது. ஆனாலும் துயிலும் இல்லம் பற்றைக்காடுகளினால் மறைக்கப்பட்டதாகவே காணப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

 
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்பு, கடந்த வருடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட சிலரால், குறித்த துயிலும் இல்லத்தின் சிறுபகுதி துப்பரவு செய்யப்பட்டது. மேலும் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
எதிர்காலத்திலும் உயிரிழந்த தமது உறவுகளின் நினைவாக அஞ்சலி செலுத்தும் பொருட்டு, குறித்த பகுதியில் காணப்பட்ட பற்றைக் காடுகள் துப்பரவு செய்யப்பட்டதாக சிரமதானப்பணியில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

 
சிரமதானப் பணியில், ஜனநாயக முன்னாள் போராளிகள் கட்சி உறுப்பினர்களும்;, குறித்த பகுதியை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.