அமைச்சரவை பத்திரத்தில் திருத்தமொன்றினை கொண்டு வந்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் நடவடிக்கை

0
458

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) புதன்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெற்றது..

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான தொடர்ந்தும் ஏற்பட்டுவருகின்ற இழுபறி நிலையை கருத்திற் கொண்டே, அதற்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் பொருட்டு இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது மிகநீண்ட காலமாக கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் தீர்க்கமான முடிவை பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மிக நீண்ட காலமாக கொடூரமான யுத்தத்தின் பிடியில் வாழந்து கொண்டே மிகநீண்ட தூரங்கள் பயணித்து சிலர் கால்நடையாகவும் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். எனவே யுத்தகாலத்தில் சுயநலமில்லாமல் எவ்வித கொடுப்பனவுகளுமின்றி கல்விக்காக பாடுபட்டவர்களை நிரந்தர நியமனத்தை வழங்கி இந்த நல்லாட்சி கௌரவப்படுத்த வேண்டும் எனவும் எம்.எஸ் தௌபீக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
.
இதற்க்கு பதிலளித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விரைவில் அமைச்சரவை பத்திரத்தில் திருத்தமொன்றினை கொண்டு வந்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அப்பத்திர அனுமதியின் பிரகாரம் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகி உள்ள நிலையினை ஊகித்தே உடனடியாக கல்வி அமைச்சரை சந்தித்து உடன்பாடொன்றினை எட்டிய நிலையில் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு தனியான அமைச்சரவை பத்திரமொன்றினை சமர்ப்பிக்க அமைச்சர் உடன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பில் அவர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேஷன், தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் அனீஸ் உட்பட தொண்டர் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டார்.

slm