வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை இரண்டு கோணங்களில் தொடர்ச்சியாக அணுகிச் செல்கின்றோம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். .
வடமாகாணசபையில் ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ரெலோ உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் அவசர அவசரமாக யாழ்ப்பணத்திற்கு சென்றிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் அங்கு தமது கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்..
அவ்வாறான நிலையில் தமது கட்சி இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையில் தற்போது நெருக்கடியான நிலைமை தோன்றியிருக்கின்றது. குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு ஏற்ப இரண்டு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தமைக்கு மேலதிகமாக ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக கட்டாய விடுமுறை அறிவிப்பை விடுத்திருந்தார்.
இதனால் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் அந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை குறிப்பிட்டு ஆளுநரிடத்தில் தீர்மானமொன்றினை கையளித்துள்ளனர்.
இதில் தவறான புரிதலொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்தில் எதிர்கட்சியாகவுள்ள தென்னிலங்கை பெரும்பான்மை கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்ததாக பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
உண்மையிலேயே இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் 15 பேரும், ரெலோவின் உறுப்பினர் ஒருவருமாக 16பேர்
முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்துள்ள அதேநேரம் அதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப்பிரேைணை சமர்ப்பித்துள்ளார்கள். இதுவே உண்மையான நிலைமையாகும்.
அவ்வாறிருக்கையில் வடக்கு முதலமைச்சர் தேர்தல் வெற்றியின் பின்னர் கட்சியின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயற்பட்டு வந்தார். அச்சந்தர்ப்பங்களின் போதெல்லாம் கட்சி உறுப்பினர்கள் அதனை சுட்டிக்காட்டியபோது நாம் அவர்களை அமைதிப்படுத்தினோம். மக்களின் நலன்களை மையப்படுத்தியும் எமது கூட்டுப்பொறுப்பினை முன்னெடுக்கும் வகையிலும் அமைதியாக செயற்பட்டிருந்தோம்.
அவ்வாறான நிலையில் அவர் தற்போது தான் எந்தக்கட்சியும் சாராதவர் என்று கூறுகின்றார். தன்னுடைய கௌரவத்திற்காக அனைத்து விடயங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் ஒழுக்க நெறிகளற்ற வகையில் செயற்படுகின்றமை வேதனைக்குரியதாகும்.
குறிப்பாக அவர் கட்சியின் மத்திய குழுக்கூட்டங்களில் பங்கேற்காது இருந்தார். ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பங்கேற்காது இருந்தார். பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் குழு கூட்டங்களையும் தவிர்த்து வந்தார். இதனால் கட்சியின் உறுப்பினர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றார்கள். எவ்வாறான நிலைமைகள் கட்சிக்குள் இருக்கின்றன என்பதையெல்லாம் அவர் அறியாது தன்னைத் தானே தனிமைப்படுத்தி வேறொரு பாதையில் பயணித்துக்கொண்டிருந்தார்.
அத்தகைய நிலைமையில் தான் வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதுவும் வடமாகாண சபையின் உறுப்பினர்களாலேயே அதிகளவிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளைக் கொண்ட கட்டமைப்பு. ஆகவே பல்வேறு கருத்துக்கள் காணப்படும்.
எனவே அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் கிடைக்கின்றபோது கட்சித்தலைமைகளுடன் அவர் கலந்து பேசியிருக்கவேண்டும். அதனை விடுத்து தானே விசாரணைக்குழுவை அமைத்தார். அந்த விசாரணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஒரு அமைச்சர் மீதே ஊழல் குற்றச்சாட்டு காணப்பட்டது. மற்றைய அமைச்சர் மீது நிர்வாக சீர்கேடு தொடர்பான குற்றச்சாட்டே காணப்பட்டது. ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் காணப்படவில்லை.
இவ்விதமான நிலையில் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இருக்கின்றார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடத்தில் எவ்விதமான நேரடிக்கலந்துரையாடல்களையும் செய்வதை தவிர்த்திருந்தார்.
தொலைபேசி வழியாக ஒருசிலருடன் கலந்துரையாடியபோதும் ஏனையவர்களுடன் அவர் கலந்துரையாடியிருக்கிவில்லை. இத்தகைய நிலைமையிலும் எமது சிரேஷ்ட தலைவர் சம்பந்தன் அவருடன் உரையாடினார்.
எனினும் அந்த விடயங்களை எல்லாம் தவிர்த்து அவர் தனது சுயதீனத்தின் அடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி அறிவிப்பை மாகாண சபையில் விடுத்தார். இதில் ஊழல் மோசடி செய்தவர், நிர்வாகச் சீர்கேடு குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிய இருவருக்கும் ஒரே விதமான தீர்ப்பையே வழங்கினார். அதற்கு அப்பால் ஏனைய அமைச்சர்கள் இருவருக்கும் கட்டாய விடுப்பையும் வழங்கினார்.
இதனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும், ரெலோவின் உறுப்பினர் ஒருவருமாக இணைந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லை என்று கட்சித்தலைமையுடனான கூட்டத்தில் தெரிவித்து அத்தீர்மானத்தினை ஆளுநரிடத்தில் கைளித்தனர்.
இவ்வாறான நிலையில் நான் நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று உறுப்பினர்களுடன் கலந்துரையாடினேன். அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் காணப்படுகின்றன. மாகாண சபை பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு சிறப்புரிமைகள் காணப்படுகின்றன.
அதனடிப்படையில் தான் அவர்கள் அத்தகைய தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். அதற்கு நாங்கள் தடையாக இருக்கமுடியாது. அவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் செயற்பாடுகளும் காணப்படவில்லை. எனவே உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடும் விடயங்களை என்னிடத்திலும் குறிப்பிட்டு அதனை தயாரிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தார்கள். அத்துடன் சத்தியக்கடதாசிகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில் எப்போதும் பொறுமையாகவும், நிதானமாகவும், விடயங்களை கையாளவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எமது சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், முதலமைச்சர் மற்றும் ஏனையவர்களுடன் இவ்விடயங்களை சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றார். இவ்விதமான இரண்டு கோணங்களில் எமது கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
virakesari