படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட விசாரணைக் குழுவை நல்லாட்சி அரசாங்கம் நியமிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்..
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 13ஆவது ஆண்டு நினைவுதினத்தையிட்டு, மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை (3) மாலை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்..
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, ‘கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க வேண்டும். இது இந்த அரசாங்கத்தின் கடமையாகும்.
‘ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களான போதிலும், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணையை முன்னெடுக்கவில்லை.
இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் பல தடவைகள் குரல் எழுப்பியுள்ளோம்’ என்றார்.
‘கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
‘இதற்குரிய விசாரணையை இந்த அரசாங்கம் முன்னெடுக்காவிடின், இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று கூறமுடியாது.
‘இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளைக் கைதுசெய்து, சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்
ஒரு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஜனநாயக நாடு என்று கூறப்படும் இலங்கையில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட வரலாறும் காணாமல் ஆக்கப்பட்ட வரலாறுமே மலிந்து கிடக்கின்றன’ என்றார்.