தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் கிழக்கின் ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து நிரந்தர அந்தஸ்தாக இருக்கவேண்டும் ரவூப் ஹக்கீம்

வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் தமிழ்பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில் ஒன்றித்து பயணிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல், வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்..

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 200மில்லியன் ரூபா செலவில்அமைக்கப்பட்ட காபட் வீதிகள் இன்று (21) திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 24 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வீதிகள் காபட் வீதிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இலங்கையில் வாழும் தமிழர்களின் கலை கலாச்சார, ஆன்மீக கேந்திர நிலையமாக மட்டக்களப்பு மாநகரம் காணப்படுகின்றது என்று கூறுவது மிகையாகாது.

அவ்வாறான மாநகரசபை வீதிகள் குன்றும் குழியுமாக இருப்பதாக எனது அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளராக கடமையாற்றிய சுரேஸ் ஆவணம் ஒன்று கொண்டு வந்தபோது அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் கிழக்கின் ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து நிரந்தர அந்தஸ்தாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே நாங்கள் பல விடயங்களை சாதிக்கமுடியும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் தமிழ்பேசும் சமூகங்கள் என்ற அடிப்படையில் அரசியல் ரீதியாக ஒன்றித்து பயணிக்க வேண்டிய அவசியம் மிக தெளிவாக உணரப்பட்ட காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம்.

கடந்த கால பூதங்கள் மீண்டும் கிளம்புகின்ற காலத்தில் சட்டம் ஒழுங்கு விடயத்தில் தீவிர சக்திகளுக்கு ஆட்சியாளர்கள் அச்சம் கொள்கின்றார்களா என்று கேட்க தோன்றும் அளவுக்கு சில சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்றன.

இந்த சூழலில் நாங்கள் இன்னும் இறுக்கமாக ஒன்றுபடவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதேபோன்று அபிவிருத்தி என்னும் விடயத்தில் அந்நியோன்யமாக சமத்துவத்தினை பேணவேண்டிய அவசியத்தினை ஆட்சியில் தெளிவானதோர் தார்மீக பொறுப்பில் இருக்கின்ற நாங்கள் உணர்ந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கலந்துகொண்டதுடன் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறீநேசன் மற்றும் அலிசாகீர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.