கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதற்கான மாகாண அமைச்சரவையின் விஷேட கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்..
பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாகக் கேட்டபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இது விடயமாக தொடர்ந்து கூறிய அவர்,
முதலில் மாகாணத்தில் எங்கெங்கு, என்னென்ன பாடங்களுக்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விவரங்களைப் பெறும் வேலைகள் அடுத்த ஓரிரு நாட்களில் ஆரம்பித்து விடும். அதற்கான பணிப்புரைகள் ஏற்கெனவே உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. 17ஆம் திகதி இடம்பெறுகின்ற மாகாண அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்குள் பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மாகாண சபையால் கோரப்படும்.
இதன்படி உடனடியாக ஆயிரம் பட்டதாரிகளும் அதன் பின்னர் கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக ஏனையோருக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. வேலைவாய்ப்பின்றி தொழிலுக்காக போராடும் பட்டதாரிகளுக்கு அநீதிகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, தற்போது வேறு அரச தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பட்டதாரிகள் தற்போது மாகாண சபையால் கோரப்படவுள்ள விண்ணப்பங்களின் போது அதற்கு விண்ணப்பிப்பதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மாகாண அமைச்சரவையிலே எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படும் வகையில் அறுதியாகவும், உறுதியாகவும் இருக்கும். கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள 4784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம் கடந்த வாரம் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கியிருந்தது. அந்த அனுமதியின் பிரகாரமே உடனடியாக 1000 பேரும் பின்னர் கட்டம் கட்டமாக ஏனைய அனுமதி வழங்கப்பட்ட 3784 பேரும் நியமனம் செய்யப்படவுள்ளார்கள். இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதோடு ஆசிரியர் பற்றாக்குறையும் முழுமையாக நீங்கி விடும்.
“வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” எனும் எனது நீண்ட நாள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதுடன் இதன் மூலம் மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்
குறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் படவுள்ளது. தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.