அம்பாறையில் 14000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

அம்பாரை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் 4000 குடும்பங்களை சேர்ந்த 14000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போதுவரை பாதிக்கப்பட்டள்ளதாக தெரிவித்த அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறினார்.
இதேநேரம் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தற்காலிக தங்குமிட முகாம்கங்கள் அமைக்கப்பட்டு அங்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து உதவிகளும வழங்கப்பட்டுவருவதாக அவர் கூறினார்.
உகன மகாஓயா போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீட்பு பணிகள் இடம்பெறுவதாகவும் நாவிதன்வெளி கிட்டங்கி பாலத்தின் ஊடான போக்குவரத்து மற்றும் மாவடிப்பள்ளி அல்லிமுல்லை போன்ற பிரதான பாதைகள் உள்ளிட்ட பல பாதைகளின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் உயர்தரப்பரீட்சார்த்திகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு சென்று தற்காலிக தங்குமிட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உடன் சென்று பார்வையிட்டார்.
இது இவ்வாறிருக்க சாகாமம் பிரதான வீதியில் கூளாவடிக்கு அன்மித்த பிரதான வீதியில் நீர்வடிந்தோடும் இடத்தில் வாகனம் ஒன்று சிக்குண்டதையும் குடியிருப்புக்கள் மாத்திரமன்றி அரச அலுவலகங்களுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதை காண முடிந்தது.
அத்தோடு வெள்ளநீர் வடிந்தோடும் பிரதான இடமான சின்னமுகத்துவாரத்திற்கு அருகில் உள்ள பனங்காட்டுபாலத்தின் கீழாக குவிந்துள்ள சல்வீனியா தாவரங்கள் அகற்றும் பணியும் இடம்பெற்று வருகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகம் மற்றும் சமூக அமைப்புக்கள் சில தனவந்தர்கள் இணைந்து உணவுப்பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியில்; கிராமத்திற்குள்ளேயே மீனவர்கள் முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதேநேரம் இடப்பெயர்வுகள் இடம்பெறும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளதுடன் பாதிப்பு தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.