மன்னாரில் கன மழையால் 43623 பேர் பாதிப்பு!

மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் 43 கிராமங்களைச் சேர்ந்த 43623 பேர் கனமழை காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். மன்னாரில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்டு வரும் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் திங்கள் கிழமை (25) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் அவசரக்கூட்டம் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களக்கு தெரிவிக்கையில்

மன்னாரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மன்னார் நகரம் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளில் பெரும்பாலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மன்னார் நகரப் பிரதேசப் பிரிவில் 43 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளன. 12469 குடும்பங்களைச் சார்ந்த 43623 பேர் இந்த வெள்ளத்தினால் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு நானாட்டான் பிரதேசப் பிரிவில் மூன்று கிராம அலுவலகப் பிரிவுகள் இந்த வெள்ளத்தினால் பாதிப்டைந்துள்ளன. இதில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரை மன்னார் மாவட்டத்தில் 14 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1248 பேர் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு முதலிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன் தொடர் மழையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படாதிருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் மன்னார் நானாட்டான் பகுதியில் 16க்கு மேற்பட்ட ஜேபிசி வாகனங்கள் மூலம் வெள்ளநீர் கடலுக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைவிட தற்பொழுது செங்கால் குறைந்த தாழமுக்கம் இன்மையால் மன்னார் மாவட்டமும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை இருப்பதனால் இங்குள்ள அனைத்து திணைக்களங்களையும் அழைத்து செங்கால் தாழமுக்க நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைவாக குறிப்பிட்ட நிலையிலிருந்து பாதிப்படையும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாத்து அவர்களை தகுந்த முறையில் பரீட்சையில் தோற்றுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் தற்பொழுது உள்ள குறைந்த காற்றழுத்த நிலைமையை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட மீனவர்களை கடற்தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய காலநிலை மாற்றம் காரணமாக 400 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் சராசரியாகக் கிடைக்கும் மழைவீழ்ச்சியில் மூன்றிலொரு பங்களவான மழை வீழ்ச்சி இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு கிடைக்கும்போது இது மன்னார் மாவட்டத்தில் பெரும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை தடுப்தற்குரிய சகல எற்பாடுகளையும் முப்படையினரும் பொலிசாரும் மற்றும் இதனுடன் தொடர்புள்ள திணைக்களங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்பொழுது மன்னார் மாவட்டம் இந்த வெள்ளப் பெருக்கினை கட்டுப்hட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)