டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதில் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையிலான மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்இ பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்,சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டனர்.
தற்போது பருவகால மழை பெய்து வருவதால் இதற்கமைய டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து தடுப்பதற்கான டெங்கு கள தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் சுற்றுச்சூழலை அசுத்தமாகவும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையிலும் வைத்திருந்தவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், சிலருக்கு எதிராக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நீர் தேங்கி யுள்ள இடங்களில் பெருகும் டெங்கு நுளம்பினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுப்பதற்காக சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர் பொதுச் சுகாதார மாதுக்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவினர் உட்பட 10 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை 480 க்கு மேற்பட்ட வீடுகளில் டெங்கு நோய் சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கின்றோம் இருந்தபோதிலும் எவ்விதமான வீடுகளிலும் டெங்கு நோய் ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான நிலைமைகளோ அல்லது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான சூழலோ இல்லை என்பது வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகின்றது .
எனவே மேலும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதுடன் இனி வருகின்ற காலம் மாரி காலம் என்பதால் மழை தேங்கக்கூடிய இடங்களை இடம் கண்டு அவற்றை சுத்தப்படுத்தினால் ஒரு நோய்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.