சிறந்த தமிழினப் பற்றாளர் மதியூகி மதிசூடி ஓர் முதிசொம்.

கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடியின் இழப்பு தாயகத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு பிரபல ஊடகவியலாளரும் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேகமான்ய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா( வி.ரி.) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த திரு. குலத்துங்கம் மதிசூடி கனடாவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அகால மரணமடைந்தார் .

அவரது மறைவு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

பிரபல சமூக சேவையாளர் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு கிழக்கில் வழங்கி வந்தவர்.

தாம் பிறந்த மண்ணை வெகுவாக நேசித்த தமிழினப் பற்றாளர் திரு.மதிசூடி அவர்கள் கொரோனா காலகட்டத்திலும் வெள்ள அனர்த்த காலகட்டத்திலும் இங்கு வந்து பாரிய சேவைகளை செய்தவர்.
அது மாத்திரமல்ல ஒவ்வொரு வருடமும் வந்து நலிவுற்ற மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து வந்தவர். அவரோடு நெருங்கிப் பழகிய ஒருவர் என்ற வகையில் அவரை நல்ல குணங்கள் நிறைந்த குணக்குன்று என்று சொல்வேன்.

ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.எமது மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வரும் போதெல்லாம் விஜயம் செய்வார். அமைதியான முறையில் அடக்கமாக சில ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்து பல ஆக்கபூர்வமான பல திட்டங்களிலும் ஒத்துழைத்தவர். பங்கெடுத்தவர் .

அவர் தமிழினத்தின் மிகுந்த பற்றாளராக விளங்கியவர். கனடாவில் கடந்த 40 வருடங்களாக தாயக மக்களின் உணர்வுகளை விளங்கிடச் செய்தவர்.

இறுதியாக காரைதீவு பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய கன்னி தேரோட்டத்தில் கலந்து கொண்டதையும் அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் திறந்து வைத்த சுவாமி விவேகானந்தர் நினைவு பூங்காவை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த விவேகானந்தர் சிலையை பார்த்த அவர் தாம் பிறந்த அரியாலையில் இந்த உயரத்தில் பிள்ளையார் சிலையை நிறுவ ஆசைப்பட்டு அங்கு அதற்கான இடத்தையும் சகபாடிகளுடன் இணைந்து பெற்றார்.
கூடவே பிள்ளையார் சிலை நிறுவும் கைங்கர்யத்தில் ஈடுபட என்னை அணுகி விவேகானந்தர் சிலையை நிறுவிய திரு.சற்குணேஸ்வரன் அவர்களோடு கலந்துரையாடினார்.

தாய்கஅரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வந்த அவர் தாம் விரும்பி மனப் பூர்வமாக வளர்த்து வரும் தாய்க சமூக செயற்பாட்டாளர் துடிப்பான இளைஞர் திரு.ஜெயசிறில் அவர்களை வளர்த்துவிட ஆக்கப்பூர்வமான யோசனைகளை கூறுவார்.
அவரைவிட ஆறு வயது குறைந்த என்னுடன் கலந்துரையாடுவதை பெரிதாக மதிப்பார். பாராட்டுவார். மிகவும் கண்ணியமாக கவனமாக அமைதியாக பேசுவார்.

அன்னார் விட்டபணிகளை தொட்டு செல்வதே எம்மவர் அவருக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

வித்தகர் விபுலமாமணி கலைச்சுடர் தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா(JP)

( காரைதீவு நிருபர்)