கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் .ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங் (Qi Zhenhong) அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த 18ஆம் திகதி கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் உள்ள தூதுவரைச் சந்தித்த ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்று கீய் ஜென்ஹோங் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாணம் உட்பட இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புதிய அரசாங்கமும், கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநரும் கடுமையாக உழைப்பார்கள் என தாம் உறுதியாக நம்புவதாக சீனத் தூதுவர் தெரிவித்தார்.
அதற்குத் தேவையான ஆதரவை வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை ஹிங்குரான சீனி தொழிற்சாலைக்கு சீனாவின் தொழில்நுட்ப உதவியை சீன அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார். சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தனது அழைப்பை ஏற்று வருகை தந்த தூதுவருக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாணம் பல்லின மக்கள் வாழும் மாகாணமாக இருப்பதால், அதன் தேசிய ஒருமைப்பாடும், வேற்றுமையும் எமது பலமாகும் எனவும் சீன அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ச்சியாகத் தேவைப்படுவதாகவும் தெரிவித்த ஆளுநர், மாகாணத்தின் திட்டங்களுக்கு சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சீனத் தூதுவர் கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபா நன்கொடையையும் வழங்கி வைத்ததோடு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.