(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஜனநாயக நாட்டில் தேர்தல் காலங்களில் ஒருவரையொருவர் விமர்சிப்பது வழக்கமான ஒரு விடயம்தான். அதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடக் கூடாது என்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாலில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
தேர்தல் காலங்களில் மாற்றுக் கட்சிக் காரர்களுக்கு நாங்கள் பேசி இருப்போம். அவர்கள் எங்களுக்கு பேசி இருப்பார்கள். அதையெல்லாம் மறந்து இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
மீராவோடை வைத்தியசாலை மிகத் தரமான வைத்தியசாலையாக மாற்றப்பட வேண்டும். கல்குடா தொகுதி மக்கள் பயனடையும் விதத்தில் ஐ.சி.யு உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட மிகப் பலமான ஒரு வைத்தியசாலையாக மாற்றப்பட வேண்டும் என்று நான் நினைத்துள்ளேன்.
இந்த நாட்டின் உதவி இல்லா விட்டாலும் வெளிநாட்டு உதவியைக் கொண்டு காணிகளை வாங்கி கட்டடங்களைக் கட்டி அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக அதனை நான் மாற்றுவேன்.
அத்தோடு, கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதெல்லாம் செய்வதாக இருந்தால் நமக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப் பிரச்சினை காணப்படுகிறது. நான் ஜனாதிபதியை சந்தித்து விசேட ஆணைக்குழுவை அமைத்து காணிப் பிரச்சினை, பிரதேச சபை பிரச்சினை, எல்லைப் பிரச்சினை, நிருவாகாப் பிரச்சினை ஆகிய எல்லாவற்றுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். என்று தெரிவித்தார்.