உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் பெற்றுள்ள அலிக்கம்பை தேவகிராம மாணவர்கள்

வி.சுகிர்தகுமார்

இலங்கை விமானப்படையின் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் பெற்றுள்ள மிகவும் பின்தங்கிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அலிக்கம்பை தேவகிராம மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று அலிக்கம்பை தேவகிராமத்தில் சென்சபேரியர் தேவாலயத்தில் பங்குத்தந்தையர்களின் தலைமையில் அன்மையில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் திருக்கோவில் கல்வி வலயத்தின் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்மிசன் மகாவித்தியாலய மாணவிகளான டி.கலிஸ்ரா மற்றும் எம்.வாணி ஆகிய இருவருக்கும் மற்றுமொரு மாணவனான அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் சுலக்ஷனுக்கும் பாடசாலையின் அதிபர் திருமதி ஆர்.நித்தியானந்தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இவர்களுக்கான பாடசாலை மட்ட பயிற்சியை வழங்கிய 13 வருட உத்தரவாத கல்வி இணைப்பாளர் திருமதி நிறோஜினி; சிவரூபன் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் பிரதி அதிபர் கே.ஜனார்த்தன் உதவி அதிபர் என்.நேசராஜா உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
குறித்த மாணவர்கள் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்மிசன் மகாவித்தியாலயத்தில் 13 வருட உத்தரவாத கல்வியில் 2021ஃ2022 இல் உடற்கல்வியும் விளையாட்டுப்பாடத்திலும் தெரிவு செய்யப்பட்டு ஊவா விளையாட்டுப்பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு உடற்கல்வியும் விளையாட்டுப் பயிற்சி நெறியினையினையும் சிறப்பாக பூர்த்தி செய்து இலங்கை விமானப்படையின் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நியமனம் பெற்ற ச.சுலக்ஷன் அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் இருந்து கல்வி கற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் என்பதோடு இல்லத்தின் தலைவர் த.கயிலாயபிள்ளை உள்ளிட்ட இல்ல இயக்குனர் சபை மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.