இலங்கை தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கட்சியின் எதிர்கால ஸ்திரத்தன்மை கருதி இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச கிளையின் தலைவரும் ,அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னை மக்கள் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலூடாக வரப் போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.
இந் நிலையில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற 7 ஆசனங்களில் 5 ஆசனங்கள் கிழக்கில் பெற்றவை.
அதிலும் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சமூகமாகவுள்ள தமிழர்கள் சார்பில் சிறந்த அர்ப்பணிப்புள்ள சேவையாளனாக சமூக சேவையாளனாக இனப்பற்றாளனாக விளங்குகிற அர்ப்பணிப்புள்ள தியாகி ஜெயசிறிலுக்கு அத் தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க வேண்டும்.
மட்டக்களப்பில் மூன்று தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி ஸ்திர நிலையில் உள்ளனர். அங்கு ஒரு பிரதிநிதி தேவையில்லை.
ஆனால் அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகும் கோடீஸ்வரனோடு தோளோடு தோள் நின்று மாவட்ட மக்களுக்கு இன்னோரன்ன சேவைகளை வழங்க ஜெயசிறிலுக்கு வழங்குவதே பொருத்தமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை மேலும் அதிகரித்து கட்சியை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சமூக செயற்பாட்டாளர் ஜெயசிறிலுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க வேண்டும்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச கிளையின் தலைவர் கி.ஜெயசிறில் அவர்களுக்கு இத் தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கினால் கட்சி அபிவிருத்தி வளர்ச்சி காணும்.
இம்முறை தேர்தலில் ஆக பல நூறு வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கிய அவர்களுக்கு வழங்க வேண்டியதே எமது காலத்தின் கட்டாயம். இதில் பலருக்கு விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் இன்றுள்ள கள நிலைமைகளில் தேசிய அரசுடன் நெஞ்சுநிமிர்த்தி எதிர் உரையாடல் செய்யக்கூடிய தகுதி உள்ளவர் மற்றும் தேவை கருதி உரிய இடத்தில் உரிய வேளையில் சேவை செய்யக் கூடிய சேவையாளர் என்ற அடிப்படையில் கட்டாயம் வழங்குவதில் ஒத்துழைப்பது அனைவரதும் கடமையாகும் என்று மக்கள் கட்சியிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.