திருகோணமலை மாவட்டத்திலும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (13) காலை 8 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள தி/விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.

பாராளுமன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

318 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் யாவும் பொலிஸ் பாதுகாப்புடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் மற்றும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ், வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.