மலையக மக்களின் இருப்புக்காக,பாதுகாப்புக்காக காங்கிரஸ் வேட்பாளர்களை நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருப்பதால்தான் மலையகத்தில் காணிகள் பாதுகாக்கப்பட்டுவருகின்றது. காங்கிரஸ் இல்லாவிட்டால் காணிகள் என்றோ பறிபோய் இருக்கும். எனவே, மலையக மக்களின் இருப்புக்காக, பாதுகாப்புக்காக காங்கிரஸ் வேட்பாளர்களை நிச்சயம் வெற்றிபெறவைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா பகுதியில் 06.11.2024 அன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ரமேஷ் மேலும் கூறியவை வருமாறு ,

‘ நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தவேளை, வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டு வழிநடத்தியவர்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலின்போது அவரை ஆதரிக்குமாறு அறிவித்திருந்தோம்.

அதுமட்டுமல்ல அவர் தலைமையிலான ஆட்சியில் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கு பல சேவைகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது. காணி உரிமையை வழங்குவதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டது. சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாட்டையும் பாதுகாத்து, மலையகத்துக்குரிய அபிவிருத்திகளுக்கான உதவிகளையும் ரணில் விக்கிரமசிங்க வழங்கினார். எமது மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஏனையோர் வாக்களிக்கவில்லை. அதனால் பெரும்பான்மையை பெறமுடியாமல்போனது.

தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எமது மக்கள் ஏன் இதொகா வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்? இதொகாதான் மக்களுக்காக குரல் கொடுக்கும், மக்களுக்காக சேவைகளை செய்துள்ளது. உரிமையுடன் வாக்கு கேட்பதற்குரிய தகுதி எமக்குதான் உள்ளது. காங்கிரஸ் இல்லாவிட்டால் மலையகத்தில் காணிகளெல்லாம் பறிபோய் இருக்கும்.

நாம் தேர்தல் காலத்தில் மட்டும் மக்கள் மத்திக்கு வரவில்லை. என்றும் மக்களுடன்தான் இருக்கின்றோம். ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் தோட்டங்களுக்கு வருபவர்கள்தான் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என விமர்சித்துக்கொண்டுள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பில் எமது அரச ஊழியர்களில் 75 வீதமானோர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளனர். ஏனெனில் எமது மக்களுக்கு அரச சேவையில் வேலைகளை பெற்றுக்கொடுத்ததும் காங்கிரஸ்தான். எனவே, உதிரிகளுக்கு வாக்களித்து, வாக்குகளை சிதறடிக்காமல், சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார் ரமேஷ்.