திருக்கோவிலில் கந்தப்புராணம் பாடலுடன் ஆரம்பித்த கந்தசஷ்டி விரதம்

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் நேற்று (2) சனிக்கிழமை கந்தப்புராணம் பாடலுடன் ஆரம்பித்தது.

நூற்றுக்கணக்கான விரதாதிகள் முதல் நாளிலேயே ஆலயத்திற்கு வருகைதந்து தர்ப்பை அணிந்து முறைப்படி விரதத்தை ஆரம்பித்தனர்.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் ஆலயகுரு சிவசிறி அங்குசநாதக்குருக்கள் முன்னிலையில் விரதம்
அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
கலாபூஷணம் த.மகேந்திரா தலைமையிலான புராணம் பாடுவோர் கந்தப்புராணம் பாட பிரபல புராணபயனிகர் கலாபூஷணம் தம்பிமுத்து மகேந்திரா பொழிப்புரை வழங்கினார்.

ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற முதல் நாள் பூஜையில் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் கணக்குப் பிள்ளை இ.லோகிதராஜா பொருளாளர் கோ.கிருஸ்ணமூர்த்தி சமய ஆர்வலர்களான க.பார்த்தீபன்( பிரான்ஸ்) மற்றும் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

இக் கந்தசஷ்டி விரதம் ஆறாம் நாளாகிய 07 ஆம் தேதி சூர சம்ஹாரத்துடன் நிறைவு பெறுகின்றது.

வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் விரதத்தினை இம்முறை அனுஷ்டிக்க வந்திருந்தனர்.

இவ்வருடம் கந்தசஷ்டி விரதத்திற்கான சஷ்டித்திதி 06 ஆம் தேதி புதன்கிழமை முன்னிரவு 10.18 க்குகூடி மறுநாள் 07 ஆம் தேதி வியாழக்கிழமை முன்னிரவு 9.35 மணிக்கு கலைகிறது என்று பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் அங்கு தெரிவித்தார்.
ஆகவே விரதாதிகள் அதற்கேற்ப நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நிகழ்வுடன் விரத உற்சவம் நிறைவுபெறும் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் அ.செல்வராஜா தெரிவித்தார்.