வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களுக்கு இலண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால் உதவி திட்டம் வழங்கி வைப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட மற்றும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களுக்கு இலண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால் உதவி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு – விழாவெட்டுவான் – கல்குடா கிராமத்திலுள்ள நூறு வறிய குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் கையளிக்கும் நிகழ்வு முருகன் ஆலய முன்றலில் (இன்று 26.10.2024 மாலை) நடைபெற்றது. இதன்போது வறிய பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நலன் கருதி வாகனம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

திடீர் மரணவிசாரணையதிகாரியும் அகிலன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவருமான கலாநிதி வீ.ஆர். மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரித்தானிய திருக்கோயில் ஒன்றியத்தின் தலைவர் எம். கோபால கிருஷ்ணன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.

இந்த அமைப்பினூடாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள 2500 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள், 600 வயோதிபர்களுக்கு மாதாந்த பராமரிப்பு கொடுப்பனவு. களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு தளபாடம், நான்க ஆலயங்களின் புனரமைப்பிற்காக நிதி மற்றும் ஈழத்தில் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் அதிகஷ்ட பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் , பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள 70 மாணவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு என்பன கையளிக்கப்பட்டுவருவதாக இணைப்பாளர் கலாநிதி வீ.ஆர். மகேந்திரன் தெரிவித்தார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளிலிருந்து விளையாட்டு முதலான போட்டிகளில் மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளுக்குத் தெரிவாகும் மாணவர்களின் போக்குவரத்து நலன்கருதி வாகனம் ஒன்றும் இங்கு கையளிக்கப்பட்டமை.’