மன்னாரில் கடும் மழையால் 7023 நபர்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (24) அதிகாலை தொடக்கம் காலை வரை கடும் இடியுடன் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது கிடைக்கப்பெற்ற தகவலின்படி மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1898 குடும்பங்களும் 7023 நபர்களும் தற்பொழுது இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மூன்று இடங்களில் மக்கள் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் நகரைப் பொறுத்தமட்டில் செல்வநகர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய பொது மண்டபத்தில் 16 குடும்பங்களைச் சார்ந்த 53 நபர்களும்

எமில்நகர் பகுதியில் அன்னை தெரேசா பாடசாலையில் 43 குடும்பங்களைச் சார்ந்த 158 நபர்களும்,

ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 குடும்பங்களைச் சார்ந்த 11 நபர்கள் இடம்பெயர்ந்து பொது இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் மன்னாரில் பெய்த கன மழை காரணமாக மொத்தமாக 1608 குடும்பங்கள் சார்ந்த 5883 நபர்கள் கடும் பாதிப்பகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சார்ந்த 1390 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1898 குடும்பங்களும் 7023 நபர்களும் தற்பொழுது இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பல தாழ்ந்தப் பகுதிகள் வெள்ளக் காடுகளாகக் காணப்படுகின்றது.

பாதிப்படைந்த மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு . பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னாரில் இரவு தொடக்கம் வியாழக்கிழமை (24) காலை வரை மிகவும் கடும் மின்னல் மற்றும் இடியுடனான கன மழையால் இந்நேரத்தில் மக்கள் வெளியேற முடியாத நிலை காணப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு 25 வீதமான பிள்ளைகளே பாடசாலைகளுக்கு சென்றதாகவும் இதன் வட்டாரம் தெரிவித்தது.

அத்துடன் மழை ஓய்வுறுவரையும் இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்த நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

(வாஸ் கூஞ்ஞ)