அங்கஜன் இராமநாதன்.
த.சுபேசன்
கடந்த நான்கு வருடங்கள் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்று மக்களுக்காக எதையுமே செய்யாமல் கட்டிய வேட்டி கசங்காமல் மறுபடியும் வாக்குக் கேட்டு வருபவர்களிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும்-ஜனநாயக தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 21/10 திங்கட்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
நான் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த நான்கு வருடங்களில் மக்களுக்காக என்ன செய்தேன் என்பதனை துண்டுப்பிரசுரமாக வழங்கி வருகிறேன்.ஆனால் கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த சிலர் அடுத்த 5வருடங்களில் இவற்றையெல்லாம் செய்வோம் என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.அவர்களிடம் கேளுங்கள் கடந்த நான்கு வருடங்கள் எமக்காக என்ன செய்தீர்கள் என்று.அவர்கள் கட்டிய வேட்டி கசங்காமல் மறுபடியும் உங்களிடம் வாக்குக் கேட்க வருவார்கள்.
எனவே மக்கள் இம்முறை தேடலுடனும்-தெளிவுடனும் வாக்களிக்க வேண்டும்.அப்போது தான் அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழும்.
தற்போது யாழ்ப்பாணத்தில் சனத்தொகை விகிதம் குறைந்து செல்கிறது.ஒன்பதில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் தொகை ஆறாக குறைந்துள்ளது.
இதற்கெல்லாம் காரணம் யார்?
எம் தமிழ்த்தேசிய வாதிகளே இதற்கு பொறுப்பு.
தமிழ் மக்களை அழித்துத் தான் தமிழ்த் தேசியத்தை அடைய வேண்டுமா?
தீர்வு கிடைத்த பின்னர் தான் மக்களை வாழ வைக்க முடியும் என்பது தமிழ் தேசிய வாதிகளுடைய வாதமாக காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் வாழ்ந்தால் தான் தமிழ்த் தேசியத்தை வாழ வைக்க முடியும்.
பொருளாதார மேம்பாடுகளை எம் பிரதேசத்தில் மேற்கொள்ளாமல் இளைய தலைமுறைகளை புலம்பெயரச் செய்து விட்டு தமிழ் தேசியத்தை எடுத்து அதை அனுபவிப்பது யார் என மேலும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.