மன்னார் மாவட்டத்தில் பிரதான கட்டுக்கரைக் குளத்தின் கீழ் இவ் நடப்பு வருட காலபோகத்தில் 31339 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி (27-10-2024) முதலாவது நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது எனவும் இதற்கான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் விவசாய நெற் செய்கைக்கு பிரதான குளமாகும் விளங்கும் கட:டுக்கரைக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் காலபோக விவசாய செய்கை தொடர்பாக வருடந்தோறும் அரசாங்க அதிபர் தலைமையில் மேற்கொள்ளப்படும்; 2024 – 2025 ஆண்டுக்கான காலபோக நெற் செய்கை தொடர்பான கூட்டம் அரசாங்க அதிபர்; கே.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளம் விவசாயிகளின் பொது மண்டபத்தில் 18.10.2024 வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
இவ் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான சகல திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் . வங்கியாளர்கள் மற்றும் 30 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இவ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தற்பொழுது அனைத்து பிரதான வாய்க்காள்களின் கீழ் வரும் 31339 ஏக்கர் பரப்புகளிலும் நெற் செய்கை பண்ணுவது என நீர்பாசனப் பொறியியலாளர் சிபாரிசுக்கு அமைவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இவ்வருட பெரும்போக விவசாய செய்கைக்கு தயார் படுத்தலுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி (27-10-2024) முதலாவது நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
விதைப்பு இறுதித் திகதியாக 4-11-2024 திகதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .4 அரை மாத நெற்களுக்கு விதைப்பினை 7-11-2024 திகதிக்கு முன்பாகவும் 3 தொடக்கம் 3 அரை மாத நெல்லினங்கள் 26-11-2024 க்கு முன்பாகவும் 2 அரை மாத நெல்லினத்தை விதைக்க விரும்புபவர்கள் 26-11-2024 க்கு முன்பாகவும் விதைப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 27-11-2024 தொடக்கம் கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாயம் செய்வோர் தேவைப்படுகிறவர்களுக்கு நீர் விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று அறுவடை ஆரம்பிக்கப் படுகின்ற திகதியாக 11-03-2025 ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்போக நெற் செய்கையை கருத்தில் கொண்டு கால் நடைகளை கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக எதிர்வரும் 20 ஆம் திகதி (20-10-2024) தொடக்கம் 22-04-2025 வரையான காலப்பகுதிக்குள் பெரும்போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிக்குள் கால்நடைகளை விட வேண்டாம் என்று கால்நடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்போக செய்கைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அத்துமீறி நீர்ப்பாசன குளங்களுக்கு சொந்தமான குளக்காணிகளில் அத்து மீறி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடந்த முறை அமுல் படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள விவசாயிகள் தமது பெரும்போக நெற் செய்கையினை முன்னெடுக்குமாறு இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)