பேசாலையில் அரசு கட்சி உப அலுவலகம் திறந்து வைப்பு.

மன்னார் தீவுப் பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் கனியவள மணல் அகழ்வு மற்றும் இப்பகுதி மக்களை பாதித்து வரும் மின் காற்றாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என பேசாலை மக்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் பேசாலைப் பகுதியில் வியாழக்கிழமை (17.10) பிற்பகல் 2.45 மணியளவில் தேசிய மக்கள் சக்தி உப அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டபோதே மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள் அன்ரன் கமிலஸ் , மற்றும் இராமையா ராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியின் பேசாலை ஒருங்கிணைப்பாளர் கொணோரியஸ் சிராய்வாவின் ஏற்பாட்டில் பேசாலை ஜோன் மேரி சுற்றுலா விடுதியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் நிசங்க மற்றும் இளைஞரணி உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் , தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் , ஊர்த்தலைவர்கள் , மொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகவுரை இடம்பெற்றதோடு. சமகாலத்தில் மன்னார்த்தீவுப் பகுதியில் மக்கள் பாரியளவில் முகம் கொடுத்துவரும் கனியவள மண்ணகழ்வு மற்றும் காற்றாலைப் பிரச்சினைகள் மக்களால் முன்வைக்கப் பட்டது.

இதன் போது புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் திருப்தியளிப்பதாகவும் முக்கியமாக ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்க முனைவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் எனவே இந்த விடயத்தையும் அவர் கருத்திற் கொண்டு மன்னார் மக்களுக்காக இந்தக் கனியமண்ணகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்களை நிறுத்துவார் என்று தாங்கள் நம்புவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

(வாஸ் கூஞ்ஞ)