ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா? ஜே.வி.பியின் கருத்தா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா? கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வாவா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளியன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அளித்த நேர்காணலில் கூறியதில் எனக்கு உதிர்த்த எண்ணக்கருவே இது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் அதிகாரப்பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமில்லை. அரசியல் இருப்பைத் தக்கவைக்க தமிழ் அரசியல்வாதிகள் இதனைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பதுடன் மேலும் வடக்கின் மக்களது பிரச்சினை தமது தொழில் தமது உற்பத்தி தமது உற்பத்தியைச் சந்தைப்படுத்துதல் தமக்குத் தேவையான வைத்தியசாலை வசதிகளே அவர்களது தேவைப்பாடாக இருக்கிறது என்றும் வழி மொழிந்துள்ளார். இதிலும் ரில்வின் சில்வா, தமிழர்களது தாயகம் வட கிழக்கு என்பதை மறுத்து வடக்கு என்பதாகவே ஒப்புவித்துள்ளார்.
ரில்வின் சில்வா அன்று போல இன்று எதிர்க்கட்சியில் இருந்து எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக கூறும் நபரல்ல. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான ஜே.வி.பி.யின் செயலாளர். தற்போது அக் கூட்டணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக உள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோசம் முறைமை மாற்றம் தேவை என்பதே. முறைமை மாற்றத்துக்கு நாம் ஒன்றும் எதிரானவர்கள் அல்ல. அதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்களிடம் நான் தொடுக்கும் வினாக்களே இவை.
1971ஆம் ஆண்டு ரோகண விஜயவீர தலைமையில் “துப்பாக்கியிலிருந்து அதிகாரம் பிறக்கிறது” என்ற மாவோ சித்தாந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசியலில் ஆயுதக்கிளர்ச்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். அது சரி பிழை என்பதல்ல எனது இப்போதைய நிலைப்பாடு. அவரது அன்றைய கிளர்ச்சியின் மூல நோக்கம் வர்க்க முரண்பாட்டை அடிப்படையாக வைத்ததே. சிங்கள மேலாதிக்கத்திற்கும் சிங்கள வாழ்வாதாரத்துக்குமான முரண்பாட்டை சமப்படுத்தவே அவர் ஆயுதம் ஏந்தினார்.
அந்த ஆயுதக் கிளர்ச்சி தோல்வியில் முடிந்த பின்னர் அவரது தலைமையில் ஏற்பட்ட இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியில் முடிந்தது. அது மாத்திரமல்ல. மனித உரிமைகளுக்கு மாறாக அவரது படுகொலையிலும் முடிந்தது.
அதன் பரிணாம வளர்ச்சியாக இன்று ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க எழுச்சிபெற்றுள்ளார். அதுவும் எமது பிரச்சினையல்ல. ஆனால், வட கிழக்கு வாழ் தமிழ்த் தேசியம் நாடும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கும். தெற்கில் ரோகண விஜயவீர தலைமையில் ஆயுதம் ஏந்தியமைக்கும் இடையிலான வித்தியாசத்தை ரில்வின் சில்வா புரிந்து கொள்ளவில்லையா?
வட கிழக்குத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியது. தமக்கு விவசாயம் நிலம் இல்லை. தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த வசதியில்லை. தமக்கு வைத்தியசாலை வசதியில்லை, என்பதற்காகவா? இல்லை இந்த நாட்டில் கௌரவமாக, சுதந்திரமாக, சமத்துவமாக, வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதற்காகவா என்பதை ஏனைய சிங்களத் தலைவர்களைப்போலவே இடது சாரியான ரில்வின் சில்வாவும் ஏன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
இடதுசாரி சிந்தனைகளுக்கு நாம் எப்போதும் எதிரானவர்களல்ல. இடதுசாரிகள் எப்போதும் ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒருகாலும் வைக்கக்கூடாது என்பதே எமது கொள்கை. ஆட்சிக்காக சிங்களம் மட்டுமென்ற பண்டாரநாயக்காவும் அன்று மாற்றத்தை நோக்கிய தலைவராகவே சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டார். அது போலவே மாற்றத்தை நோக்கிய தேசிய மக்கள் சக்தியும் போலி இடதுசாரித்துவம் பேசுகின்றதா?
ஒரு நாட்டில் வாழும் மக்கள் தாம் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படும் போது ஆட்சியாளர்களால் தாம் புறக்கணிக்கப்படும் போது ஆட்சியாளர்களின் சட்டம் தமக்கு எதிராக இயற்றப்படும் போது தமது உரிமையினை வலியுறுத்த, தமது மொழியினைப் பாதுகாக்க, தமது மண்ணினைப் பாதுகாக்க, தமது பண்பாட்டைப் பாதுகாக்க, தமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டியது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையாகும்.
மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரது சுயநிர்ணய உரிமை கருத்தின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய எண்ணக்கரு எம் தமிழர்கள் மத்தியில் முளைத்தது. இதுவே எமது ஆயுதப்போராட்டமாகவும் பரிணமித்தது. உங்களது ஆயுதப் போராட்டம் அதிகார வெறி கொண்டவர்களால் தோற்கடிக்கப்பட்டது போலவே எமது மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டமும் தோற்கடிக்கப்பட்டது. ஒருவகையில் நம் இரு தரப்பும் தத்தமது கொள்கையில் சமமானவர்களே.
ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா? ஜே.வி.பியின் கருத்தா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா? கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவியில் இருக்கும் போது வட கிழக்குத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தாம் எக்கருத்தையும் கூறமாட்டார்கள். அமைச்சர்கள் மூலம், தமது கருத்தை வெளிப்படுத்துவார்கள். அத்தகைய தொடர்ச்சியா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வாவின் கருத்து.
எனக்கு இப்போது சேக்ஸ்பியரின் நாடக வசனம் ஒன்று ஞாபகம் வருகிறது. “ நீயுமா புரூட்டஸ்” இப்போது எனது கேள்வி நீயூமா அனுர. என்று குறிப்பிட்டுள்ளார்.