( வி.ரி.சகாதேவராஜா) கல்முனையை அடுத்துள்ள கிட்டங்கியில் வெள்ளம் நிறைந்து வரும் இன்றைய சூழலில் அதனை அண்டிய ஆற்றுப்பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
இச் சம்பவம் கிட்டங்கியை அண்டிய சொறிக்கல்முனை புட்டியாறு பகுதியில் நேற்று (14) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
முதலை இழுத்து சென்றுள்ள இத்துயரச் சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சொறிக்கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணையே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.இதுவரை மீட்கப்படவில்லை.
தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது . சாய்ந்தமருது – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும், இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு நகர்ந்துள்ளன.
இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள் ,சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.