( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மாணிக்கனாச்சி சந்தானத்து தர்மகர்த்தா எந்திரி பரமலிங்கம் இராஜ மோகன் தனது ஐந்து வருட கால தர்மகர்த்தா பணியிலிருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
அவருக்கு பதிலாக குறித்த சந்தானத்தின் புதிய தர்மகர்த்தாவாக ச.நமசிவாயம் பணியேற்றுள்ளார்.
இந் நிகழ்வு கண்ணகி அம்மன் ஆலய சேனாதிராஜ வம்சத்தின் பொதுக் கூட்டத்தில் நடைபெற்றது.
அதில் தர்மகர்த்தாவாக இருந்த ப.இராஜமோகன் தனது பொறுப்புக்களை ஏனைய இரண்டு தர்மகர்த்தாக்கள் மற்றும் சந்தானத்தார் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக புதிய தர்மகர்த்தாவிடம் ஒப்படைத்தார்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளரான எந்திரி பரமலிங்கம் இராஜமோகன் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாள் பணியை திறம்படச் செய்து தான் கூறியபடி ஐந்தாவது வருடத்தில் ஓய்வு பெற்றார்.
அவர் இது தொடர்பாக கூறியதாவது.
என்னை வீடு வந்து தர்மகர்த்தா பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ( ஐந்து வருடங்களுக்கு முன் ) அழைத்து அப்பதவியை வழங்கிய நல் உள்ளங்களையும் விசேடமாக சிறிதரன் கப்புகனாரையும் அதனை ஏகமனதாக அனுமதித்த சந்தானத்தாரையும் நினைந்து கொள்கிறேன்.
இதுவரை காலமும் எனது பணியை நிவர்த்தியாக செய்ய உதவிய இக்காலங்களில் பணி செய்த நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் சந்தானத்தார்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கும் கண்ணகி அம்மனுக்கும் இடையில் பாலமாக நின்று அம்மன் அருளுடன் பணி செய்யவித்த பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஷ்வரக்குருக்கள் அவர்களுக்கும் அடி பணிகின்றேன்.
மேலும் பல வகைகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி ஒத்தாசைகள் புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.